திட்டமிட்டதற்கு முன்பே 'மாஸ்டர்' ஓடிடி வெளியாவதால், திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு நடைபெறவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 13-ம் தேதி வெளியான படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளையும் லலித் குமார் கைப்பற்றி வெளியிட்டார்.
ஓடிடி தளத்தில் வெளியிடாமல் காத்திருந்து திரையரங்கில் வெளியிட்டதால், 'மாஸ்டர்' படத்துக்குத் திரையரங்க உரிமையாளர்கள் கூடுதல் முன்னுரிமை அளித்தனர். இதனால் சுமார் 80%க்கும் அதிகமான திரையரங்குகளில் 'மாஸ்டர்' வெளியானது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்த வார இறுதி நாட்களிலும் பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் ஹவுஸ் ஃபுல் ஆனது.
இந்நிலையில், அமேசான் ஓடிடி தளத்தில் ஜனவரி 29-ம் தேதி 'மாஸ்டர்' வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. இதனை உறுதிப்படுத்தி அமேசான் ஓடிடி நிறுவனமும் அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது திரையரங்க உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனென்றால், படம் வெளியான 16 நாளில் ஓடிடியில் வெளியாகவுள்ளது 'மாஸ்டர்'.
திரையரங்குகள் ஒப்பந்தத்தில் முன்னுரிமை கொடுத்து நல்ல வசூலை ஈட்டிக் கொடுத்தும், இப்படி ஆகிவிட்டதே என்ற முணுமுணுப்புகள் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கேட்கின்றன. இது முன்னுதாரணமாகி விடக்கூடாது எனக் கருதி, திரையரங்க உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் இன்று (ஜனவரி 27) மாலை நடைபெற்றது. இதில் பலரும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்தனர். ஆனால், எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
தற்போது இரவு 9.30 மணியளவில் மீண்டும் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் என்ன முடிவு எடுக்கவுள்ளார்கள் என்பது கூட்டத்தின் முடிவில் தெரியவரும். சில திரையரங்க உரிமையாளர்களோ சமூக வலைதளத்தில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
'மாஸ்டர்' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறித்து ராம் சினிமாஸ் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:
”அவர் (விஜய்) எங்களை நம்பினார், மீண்டும் வியாபாரத்தைக் கொண்டு வந்தார். நேரடியாக ஓடிடி வெளியீட்டுக்குப் பல பேர் மிகப்பெரிய தொகையைப் பேசினாலும் முதலில் திரையரங்கில்தான் வெளியிட்டார். ஏற்கெனவே 'மாஸ்டர்' திரைப்படம் எங்கள் அரங்கில் பல வசூல் சாதனைகளை உடைத்துவிட்டது. தயாரிப்பாளருக்கு வெளிநாட்டு வசூல் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டால் ஓடிடி வெளியீடு சரிதான். ஆனால், இன்னும் 10-12 நாட்கள் கடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்".
இவ்வாறு ராம் சினிமாஸ் தெரிவித்துள்ளது.