தமிழ் சினிமா

நடிகர் சங்கத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு: விஷால் மகிழ்ச்சி

ஸ்கிரீனன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று காலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. சரத்குமார் தலைமையிலான அணியினர், விஷால் அணியினரிடம் கணக்கு வழக்குகள் உள்ளிட்ட நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தமிழக முதல்வரைச் சந்தித்தார்கள்.

நடிகர் சங்கத்தின் நிலையைக் கேட்டறிந்து கொண்டு, புதிய நிர்வாகத்தை வாழ்த்தினார் முதல்வர் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து நடிகர் சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை, புதிய நிர்வாகம் மீண்டும் கொண்டு வர வேண்டும். இந்த புதிய நிர்வாகம் அதை செய்யுமென்று நம்பிக்கை இருக்கிறது. இச்சங்கத்தின் வளர்ச்சிக்காக அரசின் முழு ஆதரவு இருக்குமென்று நடிகர் சங்க நிர்வாகிகளிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்திருக்கிறார்.

மேலும், சங்கத்தின் புதுக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று விஷால் வேண்டுகோள் விடுத்ததை ஏற்றுக் கொண்ட முதல்வர் அந்நாள் முடிவானவுடன் தெரிவிக்குமாறும், கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும் விஷாலிடம் முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து நடிகர் விஷால், "தமிழக முதல்வருடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளித்தார். அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT