"நான் தேசிய விருதை திருப்பித் தர மாட்டேன்; போராட்டம் செய்து கவனத்தை ஈர்க்க இன்னும் பல வழிகள் உள்ளன" என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் 'தூங்காவனம்' படத்தின் தெலுங்கு பதிப்புக்கான ('சீக்கடி ராஜ்ஜியம்') பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதையொட்டி நடந்து வரும் போராட்டங்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், "சகிப்புத்தன்மை அப்போதே இல்லாமல் போனதால்தான் இந்தியா - பாகிஸ்தான் பிளவு ஏற்பட்டது. இல்லையென்றால் நாம் ஒரே பெரிய நாடாக ஒன்றாக இருந்து, பல துறைகளில் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டிருக்கலாம்.
சகிப்புத்தன்மை குறித்த விவாதம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேவை. நான் சகிப்பின்மைக்கு எதிரானவன். நாத்திகவாதியாக இருந்தாலும் எல்லா மதங்களையும் சகித்துக் கொள்கிறேன். கடவுள் பக்தி இல்லையென்றாலும் எந்த மதத்தையும், அதன் பழக்க வழக்கங்களையும் எதிர்த்ததில்லை. நான் பின்பற்றமாட்டேன், அது என் உரிமை. அவ்வளவுதான்.
விருதுகளை திருப்பித்த் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிக்கின்றோம். அப்படி தருவதன் மூலம் கவனம் கிடைக்கும். கவனத்தை ஈர்க்க இதை விட பல வழிகள் உள்ளன.
விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கிறேன். எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான அடையாளச் செய்கையே அது. அவர்களது இந்தச் செயலை நான் காயப்படுத்த மாட்டேன்.
நான் எந்த ஒரு விருதையும் திருப்பி அளிக்க மாட்டேன். இந்த விஷயத்தில் பணத்தையும் கூட. நான் விருதுகளை திருப்பி அளிக்கலாம், ஆனால் என்னால் இத்தனை ஆண்டுகள் சினிமாவினால் சம்பாதித்த பணத்தை திருப்பி அளிக்க முடியாது போகலாம். நான் சம்பாதித்ததை மீண்டும் சினிமாவில் முதலீடு செய்துள்ளேன். என்னிடம் பணம் நிறைய இருந்தாலும் நான் அதனை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
படைப்புபூர்வமான மனிதர்களுக்கு அவர்களது படைப்புகளை அங்கீகரித்து நடுவர்கள் வழங்குவதே விருது. இதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்றார்
படைப்பு... மனம் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது!
"நான் குல்சார் போன்ற கவிஞர்களிடத்திலிருந்து அகத்தூண்டுதல் பெறுகிறேன். அவரைப் பற்றி நான் சிந்திக்கும் போதெல்லாம் அவரது கவிதைகளே என் நினைவுக்கு வரும். நான் அவரை சீக்கியர் என்றோ அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறியவர் என்றோ கருதுவதில்லை. இதேபோல்தான் கே.பாலச்சந்தர் பற்றியும் நான் கூற முடியும். அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை."
விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களுக்கு எழுந்த எதிர்ப்பு குறித்து...
"எனக்கு தவறிழைத்தவர்கள் வேறுவகையான பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனை நான் தனியாக எதிர்கொள்வேன்."
பாஜக அரசினால் சகிப்பின்மை நிலை ஏற்படுகிறதா?
"ஹே ராம், விஸ்வரூபம் படங்கள் வெளியாகும் போது ஆட்சியில் பாஜக இல்லை. காங்கிரஸ் அல்லது பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். அல்லது முஸ்லிம் லீக் என்று எந்த அமைப்பாக இருந்தாலும் சம அளவில் சகிப்புத்தன்மையில்லாமல்தான் இருக்கின்றன. ஆனால் அனைவரும் நான் சகிப்புத் தன்மையுடன் இருக்கவும் எனது படங்களில் காட்சியைக் கத்தரிக்கவும் எதிர்பார்க்கின்றனர்" என்றார்.