தனது நிறுவனங்களின் பேரில் யாரேனும் பணப் பரிவர்த்தனை செய்தால், ஒப்பந்தகளை மேற்கொண்டால் அதற்கு தான் பொறுப்பல்ல என இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் வேளையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசை நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். இவருடைய முதல் தயாரிப்பான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து ரைசா வில்சன் நடிப்பில் 'ஆலிஸ்' மற்றும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் யுவன்.
மேலும், பல்வேறு படங்களின் இசை உரிமையையும் கைப்பற்றியுள்ளார்.
பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து படம் தயாரித்ததால், படத்தயாரிப்பில் சில சிக்கல்களைச் சந்தித்தார் யுவன். இதனால் 'மாமனிதன்' திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. விரைவில் வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனது நிறுவனங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் யுவன். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"எனது நிறுவனம் ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் சார்பில் நான் இதனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பணம் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை. அப்படி என் பெயரிலோ எனது நிறுவனத்தின் பெயரிலோ யாரேனும் ஏதும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பாக முடியாது.
என்னைத் தவிர ஒய் எஸ் ஆர் பிரைவேட் ஃபிலிம்ஸ் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் பணப் பரிவர்த்தனை செய்ய அதிகாரம் இல்லை. தங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி". இவ்வாறு யுவன் தெரிவித்துள்ளார்.