தமிழ் சினிமா

இந்தியில் ரீமேக் ஆகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர்

செய்திப்பிரிவு

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் இந்தியில் 'பாண்ட்யா ஸ்டோர்' என்கிற பெயரில் ஒளிபரப்பாகவுள்ளது. ஜனவரி 25 முதல் ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஆரம்பமாகிறது.

தமிழில் ஸ்டார் விஜய் சேனலில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. சுஜிதா, ஸ்டாலின் முத்து, வெங்கட், ஹேமா, குமரன் தியாகராஜன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். 500 பகுதிகளுக்கும் மேல் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தமிழில் பெரும் வெற்றி பெற்ற தொடர்களில் ஒன்றாக இருக்கிறது.

ஏற்கெனவே தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்காளம்,மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மாநில நடிகர் நடிகையருடன், கதை மற்றும் கள அமைப்பில் சில மாறுதல்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வரும் திங்கட்கிழமை முதல், இந்தியிலும் 'பாண்ட்யா ஸ்டோர்ஸ்' என்கிற பெயரில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.

முன்னதாக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' களத்தை அடிப்படையாக வைத்து 'குப்தா பிரதர்ஸ்' என்கிற தொடரும் ஸ்டார் பாரத் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஒளிபரப்பாகவுள்ள பாண்ட்யா ஸ்டோரிலும் அடிப்படைக் கதையை இரவல் வாங்கிக் கொண்டு உள்ளே பல மாறுதல்களைச் செய்துள்ளதாக அதன் டீஸரில் தெரியவருகிறது.

இந்த டீஸர் விளம்பரம் யூடியூபில் பதிவேற்றப்பட்டுள்ளதால், அதில் தமிழ்த் தொடரின் ரசிகர்கள் பலரும் பாராட்டிக் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். வங்காள மற்றும் சிங்கள மொழிகளிலும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரீமேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான நடிகை விஜே சித்ரா, அண்மையில் தற்கொலை செய்து கொண்டது தொடரின் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT