ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'மிஸ்டர் லோக்கல்' படத்தைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
ராஜேஷ் - ஜி.வி.பிரகாஷ் படத்தினை ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளிலும், மே 1-ம் தேதி ஓடிடியிலும் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்து வருகிறார்.
ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 50% வரை முடிந்துள்ளது. பிப்ரவரி இறுதிக்குள் முழுப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு முன்பாகவே, ராஜேஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி 'கடவுள் இருக்கான் குமாரு' என்னும் படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.