நாடு உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறது என்று கிரிக்கெட் வீரர் நடராஜனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் பி.சி.ஸ்ரீராம்.
இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்ற தமிழக வீரர் நடராஜன், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுத் தனி முத்திரை பதித்தார். இந்திய அணியில் பல வீரர்கள் ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், நடராஜனின் பங்களிப்பு குறித்துப் பெருமையாகவே பேசப்பட்டு வருகிறது.
இந்திய அணியினர் ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஜனவரி 21) தாயகம் திரும்பினர். இதில் தமிழக வீரர் நடராஜன் சேலம், சின்னப்பம்பட்டிக்கு நேற்று மாலை வந்தார்.
நடராஜனுக்குச் சொந்த ஊர் மக்கள், ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாரட் வண்டியில் நடராஜனை அமரவைத்து, மலர்கள் தூவி, மேள தாளத்துடன், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, அவரை மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்த காட்சிகளின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகத் தொடங்கியது. பலரும் அந்த வீடியோவைக் குறிப்பிட்டு நடராஜனுக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அந்த வரிசையில் சாரட் வண்டியில் நடராஜன் வரும் வீடியோவைப் பகிர்ந்து முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நாடு உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறது. நாம் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நானும் பெருமை கொள்கிறேன். சமீப நாட்களில் நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. சமூக ஊடகங்கள் வழியாக உங்களைப் பார்த்ததன் மூலம் கிரிக்கெட்டில் புதிய விடியல் தொடங்கியுள்ளது என்று எனக்குத் தோன்றியது. கலக்குங்கள் நடராஜ்".
இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.