தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரியோ வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
2020-ம் ஆண்டிற்கான பிக் பாஸ் போட்டி கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. இதில் ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள்.
இதில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மொத்தம் பதிவான 30 கோடி ஓட்டுகளில், ஆரிக்கு 16 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. பாலாஜி இரண்டாம் இடத்தையும், ரியோ மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து, வீட்டுக்கு வந்த ரியோவுக்கு நண்பர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இதன் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
தற்போது மீண்டும் தனது சமூக வலைதளப் பக்கத்துக்குத் திரும்பியுள்ளார் ரியோ. அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? நான் இப்போது ரொம்ப நன்றாக இருக்கிறேன். பிக் பாஸ் சீசன்- 4 எனக்கு ஒரு அழகான நல்லதொரு பயணமாக இருந்தது. நீங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்திருந்த ஆதரவு, வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. உங்களுடைய ஆதரவுக்கு நன்றி.
அடுத்து நிறைய வேலைகள் உள்ளன. ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுப் பண்ணலாம். எனக்கு இவ்வளவு அன்பையும், ஆதரவையும் கொடுத்த அனைவருக்கும் நன்றி".
இவ்வாறு ரியோ தெரிவித்துள்ளார்.