தனக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருவரை அப்புறப்படுத்தித் தரும்படி நடிகர் விஜய் தரப்பில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை, அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அரசியல் கட்சியாக பதிவு செய்தார். உடனடியாக விஜய்,‘‘எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. என் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் இணையக் கூடாது’’ என்று அறிவித்திருந்தார்.
இதனால், தந்தை மகனுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஆதரவாக இருந்தவர்கள் விஜய்யின் மக்கள் இயக்கத்திலிருந்து ஓரங்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக விஜய்யின் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்துவந்த ரவிராஜா, துணைச் செயலாளர் ஏ.சி.குமார் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. ரவிராஜா, ஏ.சி.குமார் இருவரையும் நடிகர் விஜய்சென்னை சாலிகிராமம், காவேரிதெருவில் உள்ள தனக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்திருந்தார். மக்கள் இயக்க பொறுப்பில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டிருப்பதால் வீட்டைக் காலி செய்யும்படி நடிகர் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை.
இதையடுத்து நடிகர் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர். அதில், ரவிராஜா, ஏ.சி.குமார் இருவரையும் வீட்டை காலி செய்து தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.