போலி விளம்பரங்கள் தொடர்பாக அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்தப் படத்தை 'அருண் விஜய் 31' என்று அழைத்து வருகிறார்கள். ரெஜினா நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்தப் படத்துக்கு 2-வது நாயகியாக நடிக்கத் தேர்வு நடைபெற்று வருவதாக விளம்பரங்கள் இணையதளங்களில் வெளியானது. இது படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விளம்பரங்கள் தொடர்பாக அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"போலி நபர்கள் எச்சரிக்கை. எனது பெயரை வைத்து, நடிகர்கள் தேர்வு நடப்பதாக ஒரு பொய்யான அறிவிப்பு, பெண்களைக் குறிவைத்துச் சுற்றி வருகிறது. அது ஒரு பொறி. இந்த மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைம் பிரிவில் அதிகாரபூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இப்படிப்பட்ட விஷயங்களின் உண்மைத் தன்மையைப் பாருங்கள். பாதுகாப்பாக இருங்கள்"
இவ்வாறு அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
அறிவழகன் படத்தை முடித்துவிட்டு, ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் அருண் விஜய்.