தமிழ் சினிமா

அச்சம் இருந்தால் வராதீர்கள்: திரையரங்க அனுமதி குறித்து நடிகை குஷ்பு ட்வீட்

செய்திப்பிரிவு

திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்த பின்னும் வர அச்சம் இருந்தால் திரையரங்குகளுக்கு வர வேண்டாம் என்று நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில், இன்று இடைக்கால அறிவிப்பாக உரிய பாதுகாப்பு நடைமுறைகளைத் திரையரங்குகள் கடைப்பிடித்து 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சில ட்வீட்டுகளைப் பகிர்ந்துள்ளார்.

"திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்ப அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மிகப்பெரிய நன்றி. அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். நல்ல பொழுதுபோக்கை மீண்டும் தரும்.

பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு, ஒரு சில இடங்களைத் தவிர எங்கும் திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை (super spread). நாங்கள் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக் கொள்கிறோம். திரையரங்குகளும் அதே விதிமுறைகளைப் பின்பற்றும். திரையரங்குக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு. அதை நாங்கள் பின்பற்றுவோம்.

திரையரங்குகள் 100 சதவிகித ரசிகர்களுடன் இயங்குவது குறித்து வேறு அபிப்ராயங்களைக் கொண்டவர்களுக்கு, உங்களுக்கு ஒரே ஒரு விஷயம்தான். அச்சம் இருந்தால் போகாதீர்கள். உங்கள் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் திரையரங்குக்கு வர வேண்டும் என்று யாரும் உங்களை வற்புறுத்தவில்லை. ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நடிகர் விஜய்யை 'மாஸ்டர்' படத்தில் புதிய தோற்றத்தில், விசிலடித்து, வெடிவெடித்துக் காணக் காத்திருக்கிறேன். ஈஸ்வரனில் சிலம்பரசனைக் காணவும் காத்திருக்கிறேன்" என்று குஷ்பு பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT