பீட்ஸா திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தைத் தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு இந்தத் தகவலை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2012ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த திகில் படம் பீட்ஸா. கார்த்திக் சுப்பராஜின் முதல் திரைப்படமான இதை திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் சிவி குமார் தயாரித்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் கார்த்திக் சுப்பராஜ், விஜய் சேதுபதி என இருவருக்கும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.
பின் அடுத்த ஆண்டே இதன் இரண்டாம் பாகமான பீட்ஸா 2: வில்லா வெளியானது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் தனி திகில் கதையாகவே இது எடுக்கப்பட்டது. தீபன் சக்ரவர்த்தி இயக்கிய இந்தப் படம் முதல் பாகம் அளவு வெற்றி பெறவில்லை. தற்போது பீட்ஸா பெயரை வைத்து மூன்றாவது திரைப்படத்தை சிவி குமார் அறிவித்துள்ளார்.
பீட்ஸா 3: தி மம்மி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்குகிறார். அஷ்வின், காளி வெங்கட், ரவீனா தாஹா, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அஷ்வின் ஹேமந்த் இசையமைக்க பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இந்தப் படத்தின் அறிவிப்பு தொடர்பான போஸ்டரை, கார்த்திக் சுப்பராஜ், பா ரஞ்ஜித், ராம் குமார் ஆகிய இயக்குநர்கள் வெளியிட்டனர். இந்த மூன்று பேரின் முதல் படத்தையும் சிவி குமார் தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவி குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "புத்தாண்டை ஒரு நற்செய்தியோடு தொடங்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்ளது வெற்றிகரமான, பெருமைக்குரிய திரை வரிசையின் புதிய பாகம் அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்துடன் இதோ தயாராகிறது" என்று போஸ்டருடன் பகிர்ந்துள்ளார்.