'ஆயிரத்தில் ஒருவன் 2' கண்டிப்பாக இயக்குவேன் என்று இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.
ரவீந்திரன் தயாரிப்பில் 2010-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. ஒளிப்பதிவாளராக ராம்ஜி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியில் தோல்வியைத் தழுவினாலும், இப்போது வரை பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
தயாரிப்பாளர் ரவீந்திரன் மீண்டும் நேற்று (டிசம்பர் 31) தமிழகமெங்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை வெளியிட்டுள்ளார். சுமார் 70-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தைக் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டன.
இந்நிலையில் போரூர் ஜி.கே சினிமாஸ் உரிமையாளர் ரூபன் தனது ட்விட்டர் பதிவில் "ஆயிரத்தில் ஒருவன் என்ன ஒரு மாஸ்டர்பீஸ், காலத்தை வென்ற ஒரு திரைப்படம். ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யம். அன்புள்ள செல்வராகவன் சார், தயவு செய்து இந்த காவியத்தின் இரண்டாவது பாகம் எடுக்கவும். ஜிவி பிரகாசின் நெருப்பு போன்ற பின்னணி இசை" என்று தெரிவித்தார். இதில் இயக்குநர் செல்வராகவனின் ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக செல்வராகவன் "மிக்க நன்றி. ஆம்.. 'ஆயிரத்தில் ஒருவன் 2' கண்டிப்பாக இயக்குவேன்" என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிலால் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.