நடிகை பூஜா குமார் பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். இதை அவரது கணவர் விஷால் ஜோஷி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
'காதல் ரோஜாவே' திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை பூஜா குமார் அமெரிக்காவில் பிறந்தவர். ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். 1997-ல் அவர் நடித்த இந்தப் படம் 2000-ல் தான் வெளியானது. இதன் பிறகு சில ஆங்கிலப் படங்களிலும், இந்தி படத்திலும் நடித்தவர். 2013-ம் ஆண்டு கமல்ஹாசனுடன் மீண்டும் தமிழில் 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து 'உத்தம வில்லன்', 'மீன் குழம்பும் மண் பானையும்', 'பிஎஸ்வி கருட வேகா' (தெலுங்கு), 'விஸ்வரூபம் 2' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவருக்குத் திருமணமான செய்தி ரகசியமாகவே காக்கப்பட்டு வந்தது. பூஜா குமார் சமூக வலைதளங்களில் இருந்தாலும் இது பற்றி அவர் பகிர்ந்ததில்லை.
தற்போது அவரது கணவர் விஷால் ஜோஷி இது குறித்துப் பகிர்ந்துள்ளார். ஜாய் என்கிற திருமண ஏற்பாடுகளை செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் இவர், தங்களுக்குக் குழந்தை பிறந்தது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததாவது:
"ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேர் தான் இருந்தோம். இப்போதும் மூன்று பேர். எங்கள் குட்டி மகள் நாவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நானும் பூஜாவும் உற்சாகமடைகிறோம். எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கு, குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு அழைத்து வந்ததற்கு நன்றி பூஜா. எனது இந்த பிறந்தநாளை என் வாழ்நாளின் மிகச் சிறந்த பிறந்தநாளாக மாற்றிவிட்டாய். உங்கள் இருவரையும் அவ்வளவு நேசிக்கிறேன்" என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.