என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பிரபல டப்பிங் கலைஞரும், திரைப்பட நடிகருமான அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பால் நேற்று (டிசம்பர் 29) காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் பிரபலமான டப்பிங் கலைஞராக வலம் வந்தவர், சில வருடங்களுக்கு முன்புதான் நடிக்கத் தொடங்கினார்.
'மாநகரம்', 'கோலமாவு கோகிலா', 'பிகில்', 'கைதி' உள்ளிட்ட படங்களில் அருண் அலெக்ஸாண்டர் நடித்துள்ளார். ஜனவரி 13-ம் தேதி வெளியாகவுள்ள 'மாஸ்டர்' படத்திலும் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களிலுமே அருண் அலெக்ஸாண்டர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது அவருடைய மறைவு குறித்து லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நீங்க இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் போவீர்கள் என்று நினைக்கவில்லை அண்ணா. என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்களுக்கு மாற்றே கிடையாது. என்றுமே என் இதயத்தில் நீங்கள் வாழ்வீர்கள் அண்ணா".
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.