தமிழ் சினிமா

'மாஸ்டர்' வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தணிக்கைப் பணிகள் முடிந்ததால், படத்தின் வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

ஜனவரி 13-ம் தேதி வெளியீடு என்று தகவல்கள் வெளியாகி வந்தாலும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே இன்று (டிசம்பர் 29) மதியம் 12:30 மணியளவில் 'மாஸ்டர்' வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்தது.

அதன்படி, ஜனவரி 13-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் 'மாஸ்டர்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 14-ம் தேதி இந்தி டப்பிங்கான 'விஜய் தி மாஸ்டர்' வெளியாகும் எனவும் உறுதி செய்துள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கரோனா அச்சுறுத்தல் முடிந்து வெளியாகவுள்ள பெரிய நடிகரின் படமாக 'மாஸ்டர்' அமைந்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓடிடி தளத்தில் வெளியிடாமல் காத்திருந்து திரையரங்க வெளியீட்டில் உறுதியாக இருந்ததினாலும், பெரும் முதலீடு கொண்ட படம் என்பதாலும் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் 'மாஸ்டர்' வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT