தமிழ் சினிமா

மீண்டும் இணையும் 'பூலோகம்' கூட்டணி

செய்திப்பிரிவு

கல்யாண் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கவுள்ளார்.

'பூமி' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' மற்றும் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜன கண மன' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த 3 படங்களுக்கான இயக்குநர்களை முடிவு செய்ய, நீண்ட நாட்களாகக் கதைகள் கேட்டு வருகிறார் ஜெயம் ரவி. இதில் இயக்குநர் கல்யாண் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயம் ரவி - கல்யாண் இருவருமே 'பூலோகம்' படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

2015-ம் ஆண்டு வெளியான 'பூலோகம்' படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, பொன்வண்ணன், நாதன் ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாகப் பெரிதாக எடுபடவில்லை. மேலும், இப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பிலிருந்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

'பூலோகம்' படத்துக்குப் பிறகு, அடுத்த படம் இயக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தார் கல்யாண். தற்போதுதான் அந்த முயற்சி கைகூடியுள்ளது. அதுவும் ஜெயம் ரவியே அடுத்த பட வாய்ப்பையும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி - கல்யாண் இணையும் படத்தை ஸ்கீரின் சீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

SCROLL FOR NEXT