தமிழ் சினிமா

ரஜினி நலம்பெற மம்மூட்டி வாழ்த்து: இணையத்தில் வைரலாகும் ட்வீட்

செய்திப்பிரிவு

ரஜினி பூரண நலம்பெற மம்மூட்டி வெளியிட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்போது வழக்கமான நடைபெறும் சோதனையின்போது, படக்குழுவைச் சேர்ந்த 4 பேருக்கு திடீரென கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினியும் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் கரோனா நெகட்டிவ் என்று வந்தாலும், ரஜினி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் திடீரென நேற்று (டிசம்பர் 25) ரஜினி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், வீடு திரும்புவது குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரஜினி மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் வெளியானவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் ரஜினியின் உடல்நிலை குறித்து அவரிடம் விசாரித்தனர்.

மேலும், ரஜினிக்கு நெருங்கிய திரையுலக பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டியின் வாழ்த்து பெரும் வைரலாகியுள்ளது.

"விரைவில் நலம் பெறுங்கள் சூர்யா. அன்புடன் தேவா" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் மம்மூட்டி.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி, ஷோபனா, ஸ்ரீதிவ்யா, ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தளபதி'. இதில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டியும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தனர்.

'தளபதி' திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் இடம்பெற்ற வசனங்கள், காட்சியமைப்புகள் என இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் பெயரை முன்வைத்து மம்மூட்டி, ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதால் இணையத்தில் இந்த ட்வீட்டைக் கொண்டாடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT