தமிழ் சினிமா

பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகிறது 'பூமி' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செய்திப்பிரிவு

2021 பொங்கல் தினத்தில் ’பூமி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் ’பூமி’, ஜெயம் ரவியின் 25-வது படமாகும். இந்த வருடம் மே 1-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, பின்பு கரோனா கரோனா அச்சுறுத்தலால் பின்வாங்கியது. தொடர்ந்து, படத்தை ஓடிடி வெளியீட்டுக்குக் கைப்பற்ற பல்வேறு முன்னணி ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், எதுவுமே இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. தீபாவளிக்கு சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி வெளியீடு எனத் திட்டமிட்டார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இறுதியில், 'பூமி' படம் தீபாவளி வெளியீட்டுத் திட்டத்திலிருந்தும் பின்வாங்கியது. தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் படம் வெளியாவதை படத்தின் நாயகன் ஜெயம் ரவி உறுதி செய்துள்ளார். இது குறித்து ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"எனது நீண்ட திரைப்பயணம்‌ முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால்‌ ஆனது. நீங்கள்‌ அளித்த அளவற்ற அன்பு என்‌ மேல்‌ நீங்கள்‌ வைத்த மிகப்பெரும்‌ நம்பிக்கை, நீங்கள்‌ அளித்த உத்வேகம்‌ தான்‌, சிறப்பான படங்களில்‌ நான்‌ பணியாற்ற காரணம்‌. எனது கடினமான காலங்களில்‌, என்னை உங்களின்‌ சொந்த ரத்தம்‌ போலவே நினைத்து ஆதரவளித்தீர்கள்‌.
உங்களின்‌ இந்த ஆதரவே, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள்‌ இல்லாமல்‌, என்னால்‌ இத்தனை தூரம்‌ வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடூம்பத்தினராகவே கருதுகிறேன்‌.

“ 'பூமி' திரைப்படம்‌ எனது சினிமா பயணத்தில்‌ ஒரு மைல்‌ கல்‌. இப்படம்‌ எனது திரைப்பயணத்தில்‌ 25 வது படம்‌ என்பதை தாண்டி, என்‌ மனதிற்கு மிகவும்‌ நெருக்கமான படம்‌. கோவிட்‌-19 காலத்தில்‌ ரிலீஸாகும்‌ படங்களின்‌ வரிசையில்‌ இப்படமும்‌ இணைந்திருக்கிறது. உங்களுடன்‌ இணைந்து திரையரங்கில்‌ இப்படத்தை ரசிக்க நினைத்தேன்‌, ஆனால்‌ காலம்‌ வேறொரு திட்டம்‌ வைத்திருக்கிறது. இப்படம்‌ உங்கள்‌ இல்லம்‌ தேடி உங்கள்‌ வரவேற்பறைக்கே வரவுள்ளது.

Disney + Hotstar உடன்‌ இணைந்து உங்களின்‌ 2021 பொங்கல்‌ கொண்டாட்டத்தில்‌ பங்குகொள்வதில்‌ நான்‌ பெருமை கொள்கிறேன்‌. நிறைய பண்டிகை காலங்களில்‌ திரையரங்கில்‌ வந்து, எனது திரைப்படத்தை பார்த்து, பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள்‌. இந்த பொங்கல்‌ பண்டிகை தினத்தில்‌ எனது அழகான திரைப்படத்துடன்‌ உங்கள்‌ வீட்டில்‌ உங்களை சந்திப்பதை, ஆசிர்வாதமாகக் கருதுகிறேன்‌.

பெரும்‌ அன்புடனும்‌, நிறைய நம்பிக்கையுடனும்‌, என்‌ திரைப்படத்துடன்‌ உங்களை திரையரங்கில்‌ சந்திக்க காத்திருக்கிறேன்‌. கடவுள்‌ நம்மை ஆசிர்வதிக்கட்டும்" என்று இந்த அறிக்கையில் 'ஜெயம்' ரவி குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT