தமிழ் சினிமா

'கொரோனா குமார்' கதையைப் பாராட்டிய 'மாஸ்டர்' இயக்குநர்

செய்திப்பிரிவு

'கொரோனா குமார்' படத்தின் கதையைக் கேட்டுவிட்டுப் பாராட்டு தெரிவித்துள்ளார் 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

கோகுல் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் எல்லாம் இப்போதும் மீம்ஸ்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனிக்கதை ஒன்றைத் தயார் செய்துள்ளார் கோகுல். 'கொரோனா குமார்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஒட்டுமொத்தப் படமுமே ஊரடங்கு மற்றும் தனிமைக் காலங்களில் நடப்பது போன்று திரைக்கதையை வடிவமைத்துள்ளார் கோகுல். தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, 'கொரோனா குமார்' படத்தின் கதையைக் கேட்டுவிட்டுப் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"'கொரோனா குமார்' கதையை இயக்குநர் கோகுல் சொல்லக் கேட்டேன். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. முழுக்க அட்டகாசமாகச் சிரிக்க வைத்தது. படத்தைப் பெரிய திரையில் காணக் காத்திருக்கிறேன். வாழ்த்துகள் தயாரிப்பாளர் சதீஷ்"

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

'கொரோனா குமார்' படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் சதீஷ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துப் போன்று திட்டமிட்டு வருகிறது படக்குழு.

SCROLL FOR NEXT