தெலுங்கில் வெளியான 'பிரதிநிதி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் 'கோ 2' என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
சரத் மாந்தவா இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ரானி நடிப்பில் தயாராகி வரும் படம் 'கோ 2'. லியோ ஜேம்ஸ் இசையமைத்து வரும் இப்படத்தை ஆர்.எஸ் இன்போடெய்ன்மன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படப் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் படம் வெளியீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், "தெலுங்கில் வெளியான 'பிரதிநிதி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் 'கோ 2'. இதனை படக்குழு மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்" என்று படக்குழுவில் இருந்து ஒருவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஒருவரை சாதாரண மனிதன் ஒருவன் கடத்தி என்ன செய்கிறான் என்பதே 'கோ 2' படத்தின் கதைக்களம். பிரகாஷ்ராஜ் முதல்வர் பாத்திரத்திலும், பாபி சிம்ஹா தொலைக்காட்சி நிருபர் வேடமிட்டு கடத்துவது போல திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
'கோ 2' படத்தின் இயக்குநர் சரத் மாந்தவாவின் அண்ணன் பிரசாந்த் மாந்தவா தான் 'பிரதிநிதி' படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.