தமிழ் சினிமா

நடிகர்களிடையே பிளவு கிடையாது: நாசர் உற்சாகப் பேச்சு

ஸ்கிரீனன்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதன் விவரம்:

தலைவர் பதவியில் வென்ற நாசர் பேசியது:

"சந்தோஷமான களைப்பில் சிக்கித் தவித்து வருகிறோம். இது யாரையும் தோற்கடிப்பதற்காக நிகழ்ந்த நிகழ்வு அல்ல. தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. ஒரு மாற்றம் வேண்டும் என்பது தான் எங்களது நோக்கமாக இருந்தது. இதில் இளம் தலைமுறையினரை வெளிநடத்த நான், ராஜேஷ், சச்சு அம்மாவைப் போன்ற பல மூத்த கலைஞர்கள் இருக்கின்றார்கள்.

இந்த மூத்த கலைஞர்களின் அறிவு, இளம் தலைமுறையினரின் சக்தியும் ஒன்று சேர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு சொல்வோம். நாங்கள் சென்ற நிர்வாகத்தைப் பற்றி குறைக் கூற விரும்பவில்லை. இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் மிக சமீபத்தில் நிகழ்ந்த பெரிய நிகழ்வு இது. இத்தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

முதலில் 5 பேராக இருந்து அதற்கு பிறகு ஒரு அணி திரண்டு ஒரு மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறோம். இந்த மாற்றத்தை நிகழ்த்தி விட்டோம், இதை விட சங்கத்தை சிறப்பாக நடத்துவோம். நாங்கள் ஒன்றாக இருப்போம், அத்தருணத்தில் கோபத்தில் பேசி விட்டோம். ஒட்டு எண்ணிக்கை முடிந்தவுடன், நானும் சரத்குமாரும் கட்டித்தழுவி நன்றி தெரிவித்துக் கொண்டோம். அவருடைய ஒத்துழைப்பு தேவை என்று கூறி இருக்கிறேன். நடிகர்களிடையே பிளவு என்பது கிடையாது. பெரும் பணிகள் எங்களுக்கு காத்திருக்கின்றன" என்றார் நாசர்.

செயலாளர் பதவியில் வென்ற விஷால் பேசியது:

”நாசர் சக நடிகர்கள், நாடக நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று பயணம் தொடங்கினார். அவருக்கு பக்கபலமாக நாங்கள் இருந்தோம். இந்த தருணத்தில் தமிழக முதல்வருக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். போலீஸ் அதிகாரிகள் காலையில் இருந்து எங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்தார்கள்.இடையில் ஒரு விஷயம் நடந்தது. அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

இந்தத் தேர்தலால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நாசரின் கனவு நனவாகி இருப்பது மிகவும் சந்தோஷம். இந்த நடிகர் சங்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று ரித்தீஷ் எங்களுடன் பணியாற்றினார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய நடிகர்கள் வீல் சேரில் எல்லாம் வந்து வாக்களித்தார்கள். அவர்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லை. அவர்கள் அனைவருக்குமே என் நன்றி" என்றார் விஷால்.

SCROLL FOR NEXT