தமிழ் சினிமா

இனி போர் நேரம்; ரஜினியை விமர்சித்தால் தக்க பதிலடி: ‘நான் சிரித்தால்’ இயக்குநர் காட்டம்

செய்திப்பிரிவு

ரஜினியை விமர்சிப்பவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று 'நான் சிரித்தால்' இயக்குநர் இராணா தெரிவித்துள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்த 'நான் சிரித்தால்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இராணா. இவர் தீவிரமான ரஜினி ரசிகர். 'நான் சிரித்தால்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையே ரஜினிதான் வெளியிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

தற்போது டிசம்பர் 31-ம் தேதி அன்று, ஜனவரியில் எந்தத் தேதியில் கட்சி ஆரம்பிக்கவுள்ளேன் என்பதை அறிவிக்கவுள்ளார் ரஜினி. இதனைத் தனது ட்வீட்டிலும் உறுதிப்படுத்திவிட்டார்.

இந்த ட்வீட்டைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பலரும் ரஜினிக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பிவருகிறார்கள். மேலும், சில அரசியல் கட்சிகளும் ரஜினியை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ரஜினி மீதான விமர்சனம் தொடர்பாக 'நான் சிரித்தால்' இயக்குநர் இராணா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒரு நல்ல மனிதன், நல்ல நோக்கத்துடன் வரும்போது, அவர் மீது வன்மம் உமிழ்ந்து கொண்டும், அவரின் மதிப்பை, எண்ணத்தைக் குறைத்துப் பேசிக்கொண்டும் இருப்பவர்களைக் கண்டு ஒதுங்கி இருக்க முடியாது. நாகரிகமான முறையில் தக்க பதிலடிகள் பாரபட்சம் பார்க்காமல் கொடுக்கப்படும். இனி போர் நேரம்".

இவ்வாறு இயக்குநர் இராணா தெரிவித்துள்ளார்.

'நான் சிரித்தால்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இராணா.

SCROLL FOR NEXT