கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 'அசுரன்' மற்றும் 'தேன்' ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.
வருடந்தோறும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கரோனா அச்சுறுத்தலால் அடுத்த ஆண்டிற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மொழித் திரைப்படங்களுடன் சேர்த்து இந்திய மொழித் திரைப்படங்களும் திரையிடப்படும்.
இதில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்திய மொழிப் படத்துக்குத் தேசிய விருது நிச்சயம் என்று நம்புவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தமிழிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படம், வெகுஜன திரைப்படப் பிரிவில் திரையிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தேன்' திரைப்படமும் திரையிடப்படவுள்ளது. தங்களுடைய படம் தேர்வாகி இருப்பதற்கு இரண்டு படக்குழுவினருமே பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதில் 'அசுரன்' திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், 'தேன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. பத்திரிகையாளர் காட்சி மட்டுமே திரையிடப்பட்டுள்ளது. விரைவில் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவுள்ளது படக்குழு.