தமிழ் சினிமா

பைனான்சியர்களின் அதிரடி முடிவு: தயாரிப்பாளர்கள் கலக்கம்

செய்திப்பிரிவு

பைனான்சியர்களின் அதிரடி முடிவால், தயாரிப்பாளர்கள் பலரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

கரோனா அச்சுறுத்தலால் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. திட்டமிட்டபடி படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தால், பல்வேறு தயாரிப்பாளர்கள் ஓடிடி வெளியீட்டுக்கு மாறினார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு படப்பிடிப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது. இதனால் முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது, தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர்களுக்குப் புதுவிதமான சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.

என்னவென்றால், முன்பு போல் படங்களுக்கு பைனான்ஸ் அளிப்பதில்லை என்று பைனான்சியர்கள் முடிவு எடுத்துள்ளனர். இது முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் பொருந்தும் என்பது தான் கூடுதல். அதாவது ஒரு படத்தில் ஒப்பந்தமாகி, அதை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தில் ஒப்பந்தமாகும் நடிகர்களுக்குப் பிரச்சினையில்லை.

ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் பைனான்ஸ் சிக்கல் ஏற்பட்டது. இப்போது ஒரு நடிகர் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்து, தயாரிப்பாளர் பைனான்சியரிடம் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த பைனான்சியர் இந்த நடிகர் இதற்கு முன்பு 4 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். முதலில் அந்தப் படங்களை எல்லாம் முடிக்கட்டும், பின்பு இந்தப் படத்துக்கு பைனான்ஸ் தருகிறேன் என்று பைனான்சியர்கள் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

இதனால், தயாரிப்பாளர்களும் நன்மைதான் என்கிறது பைனான்சியர்கள் வட்டாரம். ஏனென்றால் சில நடிகர்கள் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி, சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு படத்துக்கு 10 நாட்கள், 14 நாட்கள் என கால்ஷீட் கொடுக்கிறார்கள்.

இதனால் படம் முடியத் தாமதமாகிறது, வட்டியும் அதிகமாகிறது. இப்போது பைனான்சியர்களின் முடிவால் திட்டமிட்டபடி பணத்தைப் புரட்ட முடியாமல் திணறி வருகிறார்கள்.

தற்போது கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு படங்களுக்கு பைனான்ஸ் தேவைப்படுகிறது. பைனான்சியர்களை அணுகும் போது, அவர்கள் கூறும் புதிய முடிவால் தயாரிப்பாளர்கள் சிலர் கலக்கத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT