தமிழ் சினிமா

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய்

ஸ்கிரீனன்

'புலி' இறுதிக்கட்ட பிரச்சினையில் கை கொடுத்த ஏ.எம்.ரத்னத்துக்கு, தனது அடுத்த படத்துக்கான தயாரிப்பு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் விஜய்.

விஜய் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய 'குஷி', 'கில்லி' போன்ற படங்களைத் தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். அவர் சில படங்களின் தோல்வியால் கடன் பிரச்சினையில் சிக்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உதவ முன்வந்தார் அஜித்.

'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'வேதாளம்' படத்தையும் தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.

இந்நிலையில், 'புலி' திரைப்படம் வெளியீட்டு பிரச்சினையில் சிக்கியது. ஜெமினி லேப் நிறுவனம் கடிதம் கொடுத்தால் மட்டுமே படம் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, ஏ.எம்.ரத்னம், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் ஜெமினி நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது ஜெமினி நிறுவனத்துக்கு கட்ட வேண்டிய சுமார் 6 கோடி ரூபாயை கொடுத்தார் ஏ.எம்.ரத்னம்.

கடைசி நேரத்தில் பெரிய உதவி செய்ததற்காக தற்போது நடித்து வரும் இயக்குநர் அட்லீ படத்தைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏ.எம்.ரத்னத்துக்கு கொடுத்திருக்கிறார் விஜய். அப்படத்தின் சம்பளத்தில், 'புலி' பிரச்சினைக்குக் கொடுத்த 6 கோடி ரூபாயை கழித்துக் கொள்ளலாம் என்று பேசியிருக்கிறார்கள்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தின் இயக்குநர் யார் என்பது தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்!

SCROLL FOR NEXT