தேசிய விருது வென்ற கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 75.
தமிழ்த் திரையுலகில் பாரதிராஜா, பாலு மகேந்திரா உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கலை இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பு வடிவமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் பணிபுரிந்துள்ளார்.
சிறந்த கலை இயக்குநருக்காக மூன்று தேசிய விருதுகளும், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்காக இரண்டு தேசிய விருதுகளும் வென்றுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. இறுதியாக 'ராமானுஜன்' படத்துக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தார். அதற்குப் பிறகு எந்தவொரு படத்திலும் பணிபுரியவில்லை.
'நாடோடித் தென்றல்', 'வண்ண வண்ணப் பூக்கள்', 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி', 'நான் கடவுள்' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற தமிழ்ப் படங்களின் கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்திதான்.
நேற்றிரவு (டிசம்பர் 13) உடல்நலக் குறைவால் கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 75. இவருடைய மனைவியின் பெயர் ராஜலட்சுமி.
கிருஷ்ணமூர்த்தியின் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என் கலைத்துறையில், என் கண்களில் என் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தியின் மறைவு நம்ப முடியாத ஒன்று. வாடித் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.