தமிழ் சினிமா

கைவிடப்பட்டதா லிங்குசாமியின் சண்டக்கோழி 2?

ஸ்கிரீனன்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக இருந்த 'சண்டக்கோழி 2' திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கவிருந்த 'சண்டக்கோழி 2' படத்தை இயக்க ஒப்பந்தமானார் இயக்குநர் லிங்குசாமி. கீர்த்தி சுரேஷ், சதீஷ், ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

'பாயும் புலி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷாலிடம் 'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு துவக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "கதை விவாதம் இன்னும் முடியவில்லை. முழுமையாக முடிந்து, அக்கதை எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே பண்ணுவேன். 'சண்டக்கோழி' என் வாழ்க்கையில் முக்கியமான படம். அதன் இரண்டாம் பாகம் அப்படத்தை விட ஒருபடி மேலே இருக்க வேண்டும்" என்று விஷால் தெரிவித்தார்.

அப்படத்தின் கதை விவாதம் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இயக்குநர் லிங்குசாமி 'பையா' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கார்த்தி வேடத்தில் வித்யூ ஜாம்வால் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'அஞ்சான்' படத்தின் சூர்யாவுடன் முக்கிய வேடத்தில் நடித்தவர் வித்யூ ஜாம்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

'பையா' இந்தி ரீமேக்கை முதல் இயக்கிவிட்டு, பிறகு 'சண்டக்கோழி 2' பண்ணவிருக்கிறாரா இல்லை என்றால் அப்படம் கைவிடப்பட்டதா என்பது விரைவில் தெரியவரும்.

SCROLL FOR NEXT