தமிழ் சினிமா

மானாட மயிலாட நிகழ்ச்சியிலிருந்து விலகும் தொகுப்பாளர் கீர்த்தி

கா.இசக்கி முத்து

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மானாட மயிலாட நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கீர்த்தி, அந்த பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. 2005-ஆம் ஆண்டு துவங்கியது இந்த நிகழ்ச்சி. மானட மயிலாட 10-வது சீசனின் இறுதிப் போட்டி அக்டோபர் 24-ஆம் தேதி கனடா நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், மானாட மயிலாட நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்திலிருந்தே அதன் தொகுப்பாளராக இருந்த கீர்த்தி, தற்போது நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள கீர்த்தி, "மானாட மயிலாட சீசன் 10 வெற்றிகரமாக முடியப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் இந்நிகழ்ச்சியில் என் பங்கும் முடிகிறது. மானாட மயிலாட பல அழகான நினைவுகளை எனக்கு தந்திருக்கிறது. பலரை சென்றடைய சரியான தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இறுதிப் போட்டியில் எனக்கு பதிலாக புதிய தொகுப்பாளர் இடம்பெறுவார். மேற்கொண்டு மற்ற சீசன்கள் நடக்குமேயேனால் அவர் தொடர்வார் என நினைக்கிறேன். நான் இந்த நிலையை எட்ட உதவிய அனைவருக்கும், என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். என் அடுத்த திட்டங்களை விரைவில் அறிவிக்கிறேன். இறைவனுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

கீர்த்தி அண்மையில் தான், நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை திருமணம் செய்து கொண்டார்.

SCROLL FOR NEXT