தமிழ் சினிமா

டிசம்பர் 10: பாலா - விக்ரம்; இருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நாள்

செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக பாலாவும், முன்னணி நடிகராக விக்ரமும் வலம் வருகிறார்கள். ஆனால், இருவருடைய வாழ்க்கையிலுமே மறக்க முடியாத நாள் இன்று (டிசம்பர் 10). ஆம், இன்றுதான் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த 'சேது' வெளியான நாள். இருவருமே பெரிய அளவில் கஷ்டப்பட்டுதான் படத்தை உருவாக்கினார்கள்.

'சேது' கதை உருவானதன் பின்னணி

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் பாலா. ஒரு கட்டத்தில் படம் இயக்குவது என்று முடிவெடுத்து பாலு மகேந்திராவிடம் தெரிவித்தார் பாலா. என்ன கதை உள்ளிட்ட எதுவுமே முடிவு செய்யாமல், தைரியமாக வெளியே வந்தார். அதற்குப் பிறகு அறிவுமதியின் கவிதை ஒன்றை மையமாக வைத்து எழுதிய கதை தான் 'சேது'. அந்தச் சமயத்தில் ஏர்வாடிக்குச் சென்றிருந்த போது அங்கிருந்த மனநலம் குன்றியவர்கள் நிலை இயக்குநர் பாலாவை வெகுவாக பாதித்தது.

அறிவுமதியின் கவிதை, ஏர்வாடியில் பார்த்த காட்சிகள் இரண்டையும் வைத்துக் கதை எழுதினார். அப்போது பாலாவின் நண்பர்கள் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார்கள். நாயகனாக விக்ரம், நாயகனின் அண்ணனாக சிவகுமார், இளையராஜா இசை என்று அனைத்துமே முடிவாகிப் படப்பூஜைக்குத் தயாரானார்கள். அடுத்த நாள் பூஜை நடைபெறவிருந்த சமயத்தில் படமோ டிராப் செய்யப்பட்டது.

கைகொடுத்த கந்தசாமி

சில மாதங்கள் கழித்து பாலாவின் உறவினர் கந்தசாமி படத்தைத் தயாரிக்க முன்வந்தார். மீண்டும் படம் ஆரம்பமானது. அந்தச் சமயத்தில் பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது. இதனால் பாலா மீண்டும் அதிருப்தி அடைந்தார். சுமார் 6 மாதங்கள் கழித்துப் படப்பிடிப்பு தொடங்கியது. 'சேது' படத்தின் முதல் பாதியை முழுமையாகப் படமாக்கி முடித்தவுடன், 2-ம் பாதிக்காக விக்ரம் தனது உடல் எடையைக் குறைக்கத் தொடங்கினார். சுமார் 13 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி வெற்றிகரமாக முடித்தார்கள்.

வெளியீட்டில் நிலவிய சிக்கல்

இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்தன. 'எங்கே செல்லும் இந்தப் பாதை' என்ற பாடல் மூலம் படத்துக்கு உயிரூட்டினார் இளையராஜா. ஆனால், நிலைமையோ தலைகீழாக இருந்தது. படத்தை வியாபாரம் செய்யத் திரையிடத் தொடங்கினார்கள். படம் முடிந்து வெளியே வந்தவர்கள், 'படம் அற்புதம், சூப்பர், பிரமாதம்' என்றவர்கள் யாருமே வாங்க முன்வரவில்லை. இதனால் மீண்டும் படக்குழுவினர் சோகத்தில் மூழ்கினார்கள்.

வியாபாரத்துக்காக மட்டும் 'சேது' படம் சுமார் 100 முறைக்கும் மேல் திரையிடப்பட்டது. ஆனால், ஒருவர் கூட வாங்க முன்வரவில்லை. இறுதியில், தயாரிப்பாளரோ தன்னிடமிருந்த பணம் எல்லாம் காலி. என்ன செய்ய என்ற பேசியபோது, பாலாவோ வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். பின்னால் நான் சம்பாதிக்கும்போது பணம் எல்லாம் உங்களுக்குத்தான் என எழுதிக் கொள்ளுங்கள் என்று பாலா தெரிவித்ததாக ஒரு தகவல் உண்டு. நீண்ட நாட்கள் போராட்டத்துக்குப் பின்பு, கஷ்டப்பட்டு ஒரு வழியாகக் குறைந்த திரையரங்குகளில் 'சேது' வெளியானது.

கைகொடுத்த விமர்சனங்கள்

தமிழ் சினிமாவில் விமர்சனங்களால் ஜெயித்த படங்களில் 'சேது'வும் ஒன்று. ஏனென்றால் 'சேது' வெளியானபோது திரையரங்குகளில் மக்கள் கூட்டமே இல்லை. ஆனால், விமர்சனங்களோ பாராட்டிப் புகழ்ந்து வந்தன. அந்தச் சமயத்தில் ஒவ்வொரு நாளாகக் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து, மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழ்த் திரையுலகில் 'சேது' தவிர்க்க முடியாத படமாக உருவெடுத்தது.

அந்த வெற்றியால் பாலா - விக்ரம் இருவருடைய வாழ்க்கையும் மாறியது. 'சேது' என்ற படத்துக்காகக் கஷ்டங்கள், அவமானங்கள் என அனைத்தையும் கடந்து மகுடம் சூட்டினார்கள். இன்று 'சேது' வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT