தமிழ் சினிமா

சிம்ரன் முன்பாக நடிப்பது எளிதாக இல்லை; என் படத்திலேயே நான் நடிக்கலாம்: கௌதம் மேனன்

செய்திப்பிரிவு

சிம்ரன் முன்பாக நடிப்பது எளிதாக இல்லை என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் 'மின்சாரக் கனவு' படத்தில் ஒரே ஒரு காட்சியில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்தார். தனது திரைப்படங்களில் ஒரு காட்சியில் தலை காட்டியோ, குரலை வெளிப்படுத்தியோ பழக்கப்பட்டவருக்கு 'கோலி சோடா 2' படத்தில் முழு நீளக் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இயக்குநர் கௌதம் மேனனாகவே மற்ற இயக்குநர்களின் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்திருந்த 'ட்ரான்ஸ்' படமும், தமிழில் நடித்திருந்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படமும் கௌதம் மேனனுக்கு நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.

தற்போது 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி படத்தில், 'வான் மகள்' என்னும் குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார் கௌதம் மேனன். நடிப்பு என்பது தான் எதிர்நோக்கும் விஷயம் இல்லை என்றும் அது ஒரு வினோதமான அனுபவம் என்றும் கௌதம் கூறுகிறார்.

உங்களுக்குள் இருக்கும் நடிகர் என்கிற பக்கத்தை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு கௌதம் மேனன் கூறியிருப்பதாவது:

"மற்ற இயக்குநர்கள் இயக்கத்தில் நான் நடித்த சில படங்கள் எனக்கு அந்த நம்பிக்கையைத் தந்தது. நான் இயக்கும்போது நடிகர்களின் முகத்தைத்தான் பார்ப்பேனே தவிர மானிட்டரைப் பார்க்க மாட்டேன். எனவே நான் நடிக்கும்போது, ஒரு நடிகரைப் பார்க்கும்போது, அதை உணர்ந்து, கூச்சமின்றி நடிப்பது கடினமாக இருந்தது. அதுவும் சிம்ரன் போன்ற அனுபவமுள்ள ஒரு நடிகருக்கு முன்பாக நடிப்பது எளிதாக இல்லை. ஆனால், இப்போது தன்னம்பிக்கை வந்திருக்கிறது. இன்னும் தீவிரமாக நடிப்பில் இறங்கலாம். ஏன் என் படத்திலேயே நான் நடிக்கலாம்".

இவ்வாறு கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

மேலும், கௌதம் மேனனுடன் நடித்தது பற்றி சிம்ரன் கூறுகையில், "பல வருடங்களாக, முழு வீச்சில் நடிக்கத் தொடங்குங்கள் என்று நான் அவரிடம் சொல்லி வருகிறேன். ஆனால், என்றுமே அந்த யோசனையை அவர் பரிசீலிக்கவில்லை. எனவே அவர் நடிக்கலாம் என்று முடிவெடுத்தது எனக்குப் பெரிய ஆச்சரியம். நடிகராகத் திரையிலிருந்தபோது கூட, இயக்குநராக மற்ற நடிகர்கள் எந்த அளவு நடிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT