தமிழ் சினிமா

படத்தை விளம்பரப்படுத்தும் சந்திப்புகளைத் தவிர்ப்பது ஏன்?- மனம் திறக்கும் ஜெய்

செய்திப்பிரிவு

படத்தை விளம்பரப்படுத்தும் சந்திப்புகளைத் தவிர்ப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் ஜெய்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் 'ட்ரிபிள்ஸ்' வெப் சீரிஸில் ஜெய் நடித்துள்ளார். டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் இந்தத் தொடர் வெளியாகிறது. வழக்கமாகத் தனது திரைப்படங்களின் விளம்பரம், பேட்டிகள், பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலும் கலந்துகொள்ளாத ஜெய் இந்த முறை தனது கொள்கைகளைச் சற்று தளர்த்தியுள்ளார்.

"ஏன் அப்படிக் கலந்து கொள்வதில்லை" என்பதற்கான காரணத்தை ஜெய் கூறியுள்ளார்.

"வீட்டில் நாம் சமைத்தால் அதை நன்றாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்போம். அது அதைச் சாப்பிடுபவர்கள் சொல்ல வேண்டியது. அதேபோல நான் நடித்த திரைப்படங்களைப் பார்க்கும் மக்கள் அதைப் பற்றிப் பேச வேண்டுமே தவிர நானே பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

சில நேரங்களில் எனக்குக் கதை பிடித்து நான் நடித்திருப்பேன். ஆனால், அது படமாக எடுக்கப்பட்டபின் ஏதோ ஒரு விஷயம் காணாமல் போயிருக்கும். அப்படியான சூழலில் நான் படத்தைப் பற்றி விளம்பரம் செய்து குற்ற உணர்வோடு இருக்க விரும்பவில்லை.

சராசரியாகத் திரையரங்குக்குச் செல்லும்போது, குடும்பத்துடன் ஒருவர் சென்றால் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழிக்கிறார். அவருக்கு அந்தச் செலவை வைக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்".

இவ்வாறு ஜெய் பதிலளித்துள்ளார்.

SCROLL FOR NEXT