படப் பூஜையில் இயக்குநர் விவேக், நடிகை ப்ரியாமணி, தயாரிப்பாளர் காயத்ரி, நடிகை சாரா அர்ஜுன். 
தமிழ் சினிமா

ப்ரியாமணி நடிக்கும் 'கொட்டேஷன் கேங்' - மும்பையில் படப்பிடிப்பு தொடக்கம்

செய்திப்பிரிவு

ப்ரியாமணி நடிக்கும் 'கொட்டேஷன் கேங்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் 'பாக்ஸர்' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விவேக். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா நெருக்கடியால் தடைப்பட்டுள்ளது. அடுத்த வருடம் 'பாக்ஸர்' படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் ப்ரியாமணி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கொட்டேஷன் கேங்' என்கிற கேங்ஸ்டர் திரைப்படத்தை விவேக் இயக்குகிறார். மும்பையில் நிழலுலகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இந்தக் கதையில் முக்கியக் கதாபாத்திரத்தில் 'தெய்வத் திருமகள்', 'சைவம்' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஃபிலிமினாடி என்டர்டெயின்மென்ட் (Filminaty Entertainment) சார்பில் காயத்திரி சுரேஷ் மற்றும் ஶ்ரீ குரு ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் G. விவேகானந்தன் ஆகியோருடன் சேர்ந்து இயக்குநர் விவேக்கும் இணை தயாரிப்பாளராகப் படத்தைத் தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் ஐந்து இந்திய மொழிகளில் மும்பை, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மிக முக்கியப் பகுதிகளில் 'கொட்டேஷன் கேங்' படமாக்கப்படுகிறது.

இந்தப் படத்தில் மேலும் நடிகர்கள் விஷ்ணு வாரியர், சதீந்தர் மற்றும் நடிகைகள் அக்‌ஷயா, கியாரா, சோனல், கேதன் கராந்தே, ஷெரீன் ஆகிய இளம் நடிகர்கள் நடிக்கின்றனர்.

படத்தைப் பற்றிப் பேசியிருக்கும் இயக்குநர் விவேக், "இப்படம் அனைத்திந்திய ரசிகர்களுக்குக் கதை சொல்லப்படும் விதத்திலும், தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய அனுபவமாகவும், தரமான படைப்பாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT