தமிழ் சினிமா

வி.பி.எஃப் கட்டண சர்ச்சை; விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம்: டி.ராஜேந்தர் தகவல்

செய்திப்பிரிவு

வி.பி.எஃப் கட்டண சர்ச்சை தொடர்பாக விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணி வெற்றி பெற்றுப் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ஆர் அணியினரோ, புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

'தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சங்கத்துக்கு டி.ராஜேந்தர் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இந்தச் சங்கத்துக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று (டிசம்பர் 7) காலை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

* தமிழ்நாட்டில் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவிவரும் வி.பி.எஃப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மற்றும் க்யூப் மற்றும் இதர சர்வீஸ் புரொவைடர் நிறுவனங்களிடமிருந்து தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகையை அந்த நிறுவனங்கள் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியும் எங்களுடைய தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் க்யூப் மற்றும் சர்வீஸ் புரொவைடர் நிறுவனங்களுடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல விதங்களில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு அவர்கள் செவி சாய்க்காத காரணத்தாலும், வேறு சில காரணங்களைச் சொல்லிக் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்ததாலும், க்யூப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்று அவர்கள் தெரிவித்த காரணத்தாலும், இன்று கூட்டப்பட்ட எங்களது தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் செயற்குழுக் கூட்டத்தில் எங்களால் (தயாரிப்பாளர்களால்) இனிமேல் வி.பி.எஃப் கட்டணத்தைச் செலுத்த இயலாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

* படத்தைத் திரையிடுவதற்கான சர்வீஸ் கட்டணம் ஒரு திரையரங்கிற்கு ரூ.1,500 தவிர எங்களால் எந்த விதத்திலும் வி.பி.எஃப் மற்றும் எந்தக் கட்டணமும் செலுத்த இயலாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

* வட இந்திய கம்பெனிகளுக்கு வி.பி.எஃப் கட்டணம் வாங்கிக் கொள்ளாமலே படத்தைத் திரையிட வழிசெய்யும்போது எங்களுடைய தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் பாகுபடுத்தி எங்களைப் பழிவாங்குவது எந்த அடிப்படையில் எங்களிடம் மட்டும் வி.பி.எஃப் வசூலிப்பது நியாயம் என்றும் மற்றும் எங்களிடம் மட்டும் வி.பி.எஃப் வசூலிப்பது நியாயமானதாகத் தெரியவில்லை.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் எங்களுக்குரிய பதிலைத் தராவிட்டால் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்துவோம் என்பதை இந்தச் செயற்குழுக் கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT