தமிழ் சினிமா

புதிய சங்கம் உருவாக்கம்: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதிய சங்கம் உருவாக்கம் தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரிந்து புதிதாக 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' மற்றும் 'தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்' ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புதிய சங்கம் உருவாக்கம் தொடர்பாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நமது வாழ்க்கையை மறுமலர்ச்சி அடையச்செய்ய, ஜனநாயக ரீதியில் நடைபெற்ற நமது சங்க தேர்தலில், சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கலந்துகொண்டு, வெற்றிச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். பதவி ஏற்பு விழாவிற்குப் பெருந்திரளாக வந்திருந்து நம் ஒற்றுமையை நிலைநாட்டிய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நமது சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளின் சார்பாக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது வி.பி.எஃப் கட்டணம் சம்பந்தமாக நடந்துள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி தயாரிப்பாளர்கள் வி.பி.எஃப். கட்டணம் கட்ட இயலாது என்ற நமது நிலைப்பாட்டினை குறிப்பிட்டு டிஜிட்டல் புரவைடிங் நிறுவனங்களுக்கு நமது சங்கம் சார்பாக கடிதம் எழுதி உள்ளோம். மேலும் திங்கட்கிழமை நடைபெற உள்ள செயற்குழுவில் வி.பி.எஃப். கட்டணம் குறித்து விரிவாக ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்ததாக நமது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தான் நிரந்தரமானது என்று குறிப்பிட்டு நம் சங்கத்தைப் பெருமைப் படுத்தியிருப்பதற்காக அமைச்சர் அவர்களுக்கு நமது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஒவ்வொருவரும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒற்றுமையே உயர்வு. அப்படிப்பட்ட நமது சங்கத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில், சங்க நலனிற்கும் சக தயாரிப்பாளர்களின் நலனிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் யார் பேசினாலும் சரி, யார் செயல்பட்டாலும் சரி அவர்கள் மீது சங்க விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த நிர்வாகம் தயங்காது என்று உறுதிப் படக் கூறிக்கொள்கிறேன்.

நமது சங்கம், நமது வலிமை. நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம். ஒன்று படுவோம் உயர்வடைவோம்"

இவ்வாறு தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT