தமிழ் சினிமா

’ஜெமினி கணேசன் என்னை ‘ஜானி ஜானி’ன்னுதான்  கூப்பிடுவார்; எனக்கு ஒரு நல்ல அண்ணனா இருந்தார் ஜெமினி!’ - ஜெமினி 100 - செளகார் ஜானகி நெகிழ்ச்சி

வி. ராம்ஜி

‘ஜெமினி கணேசன் என்னை ‘ஜானி ஜானி’ என்றுதான் கூப்பிடுவார். எனக்கு ஒரு நல்ல அண்ணனாக ஜெமினி கணேசன் இருந்தார்’ என்று நடிகை செளகார் ஜானகி தெரிவித்துள்ளார்.

ஜெமினி கணேசன் நூற்றாண்டையொட்டி அவரின் மகள், டாக்டர் கமலா செல்வராஜ் திரைப் பிரபலங்களிடம் ஜெமினியுடனான அனுபவங்களைக் கேட்டு வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.

அதில் செளகார் ஜானகி, ஜெமினி கணேசன் குறித்து தெரிவித்ததாவது:

‘’ஜெமினி சார், மிகச்சிறந்த நடிகர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவருடன் பழகப் பழகத்தான் தெரிந்தது... அவர் பல துறைகளிலும் சிறந்தவர் என்று. ஒரு பெரிய நிறுவனத்தையே நிர்வகிக்கக் கூடியவர் என்று தெரிந்துகொண்டேன்.

அவர் குடும்ப விஷயமாகட்டும், குழந்தைகளுக்கு படிப்பு கொடுப்பதாகட்டும், யார் யாருக்கு என்னென்ன செய்ய வெண்டும் என்பதாகட்டும் எல்லாமே மிகச் சரியாக செய்தவர் ஜெமினி சார். எந்தக் காரணத்தைக் கொண்டும் தன் குடும்பத்தார் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையுடன் இருந்தார்.

எல்லோருக்கும் நல்ல கல்வியைக் கொடுத்திருக்கிறார். அவர் எப்போதுமே அன்பைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். எத்தனையோ விமர்சனங்களுடன் தான் வாழ்ந்தார். ஆனால் எது வந்தாலும் எல்லாமே இப்படி வந்துவிட்டு அப்படிப் போய்விடுமே தவிர, அவை எதுவுமே ஜெமினி சாரை பாதிக்கவே பாதிக்கவில்லை.
அவர் மனதுக்கு எது சரியென்று நினைத்தாரோ, அவருக்கு எது உண்மை என்று தோன்றியதோ அதைத்தான் செய்தார். மனசாட்சிக்கு பதில் சொன்ன ஒரேயொரு நடிகர் அவர். யாராவது ஏதாவது அவர் பற்றிப் பேசினாலும் அவர் வந்துவிட்டால், அவருக்கு எதிரே யாரும் பேசமாட்டார்கள். அப்படிப் பேசுவதற்கு யாரும் துணிவும் கிடையாது. அப்படியொரு தனித்தன்மையுடன் இருந்தார் ஜெமினி சார். அது நிஜமாகவே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

சரி தப்பெல்லாம் இருக்கட்டும். அவருக்கு சரியென்று பட்டதை அவர் செய்தார். அவருடைய சந்தோஷத்துக்காக செய்தார். இதனால் யாருக்காவது ஏதாவது துன்பமோ வருத்தமோ கொடுத்தாரா என்ன? யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல்தான் இருந்தார். அதில் கவனமாகவும் இருந்தார்.

அப்படியொரு அன்பான மனிதர் ஜெமினி சார். தயாரிப்பாளர்களுக்கு ஒரு கஷ்டமும் கொடுக்கமாட்டார். ஒருமுறை எனக்கு கடுமையான ஜுரம். படுத்தபடுக்கையாகக் கிடந்தேன். உடனே என்னைப் பார்க்க வந்தார். எனக்கு மூன்று அண்ணன் தம்பிகள் இருந்தாலும் கூட, அவர்கள் எல்லோரும் என் ரத்த சம்பந்த சகோதரர்கள். ஆனால் ஜெமினி கணேசன் என்னுடைய உண்மையான சகோதரர். அவர் கடைசி வரை எனக்கு அண்ணனாக இருந்தார். என்னுடைய கஷ்ட நஷ்டங்களையெல்லாம் பேசி, எனக்கு தொடர்ந்து அன்பைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

ஜெமினி கணேசன், என்னை ‘ஜானி ஜானி’ என்றுதான் கூப்பிடுவார். எங்கே பார்த்தாலும் ‘ஜானி’ என்றுதான் கூப்பிடுவார். ஒருநாள் சாவித்திரியம்மா கூட, ‘என்ன இப்படி உரிமையா ஜானி ஜானின்னு கூப்பிடுறீங்க?’ என்று கோபித்துக் கொண்டார். உடனே ஜெமினி, ‘அவளை மாதிரி எனக்கொரு தங்கை இல்லை. ஏண்டி நீ சண்டை போடுறே?’ என்று சாவித்திரியம்மாவிடம் சொன்னார்.

தடதடவென வீட்டுக்கு வந்துவிடுவார். ‘ஜானி பிரமாதமா சமைப்பியே. என்ன சமையல் இன்னிக்கி’ என்பார். நான் பல வகையான ரசம் வைப்பேன். அவருக்கு நான் வைப்பதில் மைசூர் ரசம்தான் பிடிக்கும். ‘ஒரு டம்ளர்ல கொடு’ என்று கேட்டு அதில் கொஞ்சம் நெய்விட்டு குடிப்பார். ஜெமினியும் பிரமாதமாக சமைப்பார். ‘கொஞ்சம் தள்ளு நான் சமைக்கிறேன்’ என்று சமைக்க ஆரம்பித்துவிடுவார். பகோடா போட்டுக் கொடுப்பார்.

சமைத்துக் கொண்டே பாடல்களெல்லாம் பிரமாதமாகப் பாடுவார். ‘என்ன மனுஷன் இவர். இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டு வெளியே காட்டாமல் இருக்கிறாரே’ என்று நினைத்துக் கொள்வேன். அதற்குக் காரணம், அவரின் அடக்கம். அவர் படித்த படிப்பு. ’நான் படிச்சவன்’ என்ற ஆணவத்தோடு ஒருநாளும் நடந்துகொண்டதில்லை. நிறைய படித்தவர்களை, இந்த சினிமா இண்டஸ்ட்ரி சரியாகப் பார்க்காது என்பது ஜெமினி சாருக்கு நன்றாகவே தெரியும்.

யாரிடம் என்ன பேச வேண்டுமோ, யாரிடம் சொன்னால் தன் பேச்சு எடுபடுமோ அதைத்தான் பேசுவார். ஜெமினி மாதிரி எனக்கு அண்ணன் கிடைத்தது இன்றைக்கும் பெருமையாக நினைக்கிறேன். ஜெமினி கணேசனுக்கு உரிய கெளரவமும் பட்டமும் விருதுகளும் கிடைக்கவில்லையோ என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. பேர், புகழ், பட்டங்கள் இதற்காக அவர் அலைந்த மாதிரியும் தெரியவில்லை.

யாருக்குமே கொடுக்காத பட்டம் அவருக்கு கிடைத்தது... ‘காதல் மன்னன்’. காதல் என்பது காதலியிடம் மட்டும் செலுத்துகிற விஷயமில்லை. அது அன்பு. உலகம் முழுக்க எல்லோரிடமும் கொடுப்பது. ஜெமினி கணேசன் அப்படித்தான் எல்லோருக்கும் அன்பைக் கொடுத்தார்.

அவருடன் கடைசியாக, ‘தொடரும்’, ‘கொண்டாட்டம்’ படங்களில் சகோதரர் ஜெமினியுடன் நடித்தேன். மறக்கவே முடியாது.

இவ்வாறு செளகார் ஜானகி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT