அக்டோபர் 23ம் தேதி முதல் படங்கள் வெளியீடு இல்லை என்ற முடிவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நடிகர்களின் சம்பளப் பிரச்சினை, QUBE மற்றும் UFO விலை ஏற்றம், விநியோகஸ்தர்களின் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி பேசி முடிவெடுக்க அக்டோபர் 23ம் தேதி முதல் படங்களை வெளியிடப் போவதில்லை என்று முடிவெடுத்தது தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம்.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவால், பல்வேறு சிறு முதலீட்டு படங்களை முன்னெச்சரிக்கையாக அக்டோபர் 23ம் தேதிக்கு முன்பே வெளியிட்டார்கள்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம் அக்டோபர் 23ம் தேதி முதல் படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவை வாபஸ் பெற்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 23/10/2015 முதல் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவை திரும்பப் பெறக்கோரி கேட்டுத் கொண்டதற்கிணங்கவும், நமது தயாரிப்பாளர்கள் பலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் 23/10/2015 முதல் எந்த மொழித் திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்ற முடிவை ஒத்திவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த திடீர் மாற்றம் குறித்து விசாரித்த போது, "தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கும் ஒரு பெரிய நடிகரின் படத்தை ஆளும் கட்சியின் நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து வாங்கிவிட்டது. அப்படியிருக்கும் போது தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவை எப்படி செயல்படுத்த முடியும்? அதுமட்டுமன்றி, சில தயாரிப்பாளர்களும் சங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் தயாரிப்பாளர் சங்கம் தனது முடிவை வாபஸ் வாங்கிக் கொண்டது" என்று தெரிவித்தார்கள்