தமிழ் சினிமா

'மாஸ்டர்' வெளியீட்டில் உள்ள சிக்கல்களும் குழப்பங்களும்!

செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டில் உள்ள சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'மாஸ்டர்'. இப்படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரித்து வந்தார். இதில் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிந்தவர்கள் லலித் மற்றும் ஜெகதீஷ்.

இதில் 7 ஸ்கிரீன் எண்டர்டையின்மெண்ட் என்ற நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து, விநியோகம் செய்து வருபவர் தான் லலித். விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா', விஜய் சேதுபதி நடித்து வரும் 'துக்ளக் தர்பார்', விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம், விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட படங்களை லலித் தான் தயாரித்து வருகிறார்.

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அதன் ஒட்டுமொத்த உரிமையையும் கைப்பற்றினார் லலித். தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ செலவழித்த தொகையுடன் சேர்த்து, கூடுதலாக கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டார். அதற்குப் பிறகு படத்தை தயாரித்தது லலித் தான்.

படத்தின் தமிழக உரிமை, கேரள உரிமை, வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை என ஒவ்வொன்றாக விற்றுவந்தார் லலித். படமும் தயாரானவுடன் ஏப்ரல் வெளியீடு என்று திட்டமிட்ட போது, கரோனா அச்சுறுத்தல் தொடங்கி ஒத்திவைக்கப்பட்டது.

'மாஸ்டர்' படத்தின் தமிழக உரிமையை மட்டும் சுமார் 70 கோடி ரூபாய் அளவுக்கு லலித் விற்றுள்ளதாக கூறுகிறார்கள். இந்தப் பணம் கைக்கு வரவேண்டுமென்றால், படமோ 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ய வேண்டும். தற்போது கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை வைத்துக் கொண்டு 'மாஸ்டர்' படத்தின் முதலீட்டை எடுத்துவிட முடியுமா என்றால் கண்டிப்பாக இல்லை என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். 'மாஸ்டர்' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை பெரும் விலைக் கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றிவிட்டது. கரோனா ஊரடங்கு சமயத்தில் 'மாஸ்டர்' படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், விஜய்யோ எந்தவொரு காரணம் கொண்டும் ஓடிடிக்கு வேண்டாம், திரையரங்கில் வெளியாகட்டும், நஷ்டம் ஏற்பட்டால் இன்னொரு படம் பண்ணலாம் என்று தயாரிப்பாளருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

'மாஸ்டர்' வெளியீட்டு தாமதத்தால் லலித் உள்ளிட்ட பலருமே வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியவர்களில் ஒரு சிலரைத் தவிர, மீதமுள்ளவர்கள் யாருமே தயாரிப்பாளரை நெருக்கவில்லை. ஆனால், நாட்கள் ஆக மீதமுள்ளவர்களும் பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடிக் கொடுத்துள்ளனர்.

இதனால், லலித்துக்கு கடும் பண நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. திரையரங்குகளில் படத்தை வெளியிட்டாலும் 50% இருக்கைகள் தான் என்ற நிலையில் போட்ட பணத்தை எடுத்துவிட முடியுமா என்ற சிறு அச்சம் லலித்துக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வெளிநாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. சில நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கூட்டம் வரவில்லை. இப்படியான நடைமுறை சிக்கல்களையும் 'மாஸ்டர்' படக்குழு கவனித்து வருகிறது.

இந்தச் சிக்கல்களால் ஓடிடியில் 'மாஸ்டர்' வெளியானால் என்னவாகும் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே அமேசானுக்கு ஓடிடி உரிமையைக் கொடுத்துள்ளதால், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் படம் வெளியாக வாய்ப்பில்லை. அமேசான் ஓடிடி நிறுவனத்திடமே கூடுதலாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்றே பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

ஓடிடி வெளியீட்டு 'மாஸ்டர்' போகுமானால், படக்குழுவினருக்கு வேறு விதமான சிக்கல் காத்திருக்கிறது. என்னவென்றால் முன்பாக திரையரங்க வெளியீட்டுக்கு போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையுமே ரத்து செய்ய வேண்டும். அப்படி ரத்து செய்யும் போது, விநியோகஸ்தர்கள் கொடுத்த பணம் அனைத்தையும் வட்டியுடன் திரும்பக் கொடுக்க வேண்டும்.

இப்போதைக்கு டிசம்பர் மாதத்துக்குள் கரோனாவுக்கு தடுப்பூசி வர வேண்டும், திரையரங்குகளில் 75% இருக்கைகளுக்கு அனுமதி உள்ளிட்ட சில நல்ல விஷயங்கள் நடக்கும் என 'மாஸ்டர்' படக்குழு நம்புகிறது. அப்படி அனைத்து நல்லபடியாக நடந்தால் பொங்கலுக்கு 'மாஸ்டர்' திரையரங்குகளில் வெளியாகும். பொங்கலுக்கும் நிலைமை சீராகவில்லை என்றால், நிதி நெருக்கடியை சமாளிக்க 'மாஸ்டர்' ஓடிடியில் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

SCROLL FOR NEXT