2016 கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த 'பாகுபலி 2' திரைப்படம் தற்போது 2016 நவம்பரில் வெளியிட திட்டமிட்ட்டுள்ளனர்.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்தது, தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய படத்தை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது. தற்போது, சீனாவில் 'பி.கே' படத்தை வெளியிட்ட இ-ஸ்டார்ஸ் நிறுவனம் 'பாகுபலி' படத்தின் உரிமையையும் வாங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இப்படத்தை விளம்பரப்படுத்த படக்குழு களம் இறங்கியிருப்பதால், 'பாகுபலி' இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை படக்குழு இன்னும் தொடங்கவில்லை.
'பாகுபலி' படத்தை விளம்பரப்படுத்தி, வெளிநாடுகளில் முதலில் வெளியிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை முடித்து 2016 நவம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கு முன்பு 2016 கோடை விடுமுறை வெளியீடாக 'பாகுபலி 2' வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
'பாகுபலி' முதல் பாகத்துக்கான படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்துக்கான 40% படப்பிடிப்பை ராஜமெளலி முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.