பிக் பாஸால் வாய்ப்புகள் வந்தாலும் அதனால் எந்த உத்தரவாதமும் கிடையாது என்று நடிகர் ஷாரிக் ஹஸன் கூறியுள்ளார்.
நடிகர்கள் ரியாஸ் கான் - உமா ரியாஸ் தம்பதியரின் மகன் ஷாரிக். 'பென்சில்' திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் பிக் பாஸ் இரண்டாவது சீஸனில் போட்டியாளராகப் பங்கேற்றார். 'பென்சில்' திரைப்படத்துக்குப் பிறகு தற்போது 'காலம் நேரம் காதல்' என்கிற வெப் சீரிஸில் நடித்து வருகிறார் ஷாரிக்.
சமீபத்தில் ஷாரிக் அளித்துள்ள பேட்டியில், பிக் பாஸ் அனுபவம் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க உதவியதா என்று கேட்டபோது, "பிக் பாஸ் பெரிய அளவுக்கு நம்மை வெளி உலகுக்குக் காட்டும். ஏனென்றால் மக்கள் குடும்பத்துடன் பார்க்கும் சீரியலைப் போல அது. பிக் பாஸ் மூலம் விளம்பரப் படம் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் வரும். ஆனால், பிக் பாஸால் வேலை கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது. அது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக திரைத்துறையில் பெரிய ஆளாக வளர வேண்டும் என்ற கனவோடுதான் பலரும் பிக் பாஸுக்குள் வருகின்றனர்.
பிக் பாஸில் நான் கலந்து கொண்டது 2018ஆம் ஆண்டு. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நான் 'பென்சில்' படத்தில் நடித்தேன். பிக் பாஸுக்குப் பிறகு நான் சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன். தற்போது ஒரு ஓடிடி திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறேன். இன்னொரு திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு இந்த வருடக் கடைசியில் வரும்" என்று ஷாரிக் கூறினார்.
இதில் அதிர்ஷ்டத்துக்கு இடமுள்ளதா என்று கேட்டால், 'இருக்கிறது' என்கிறார் ஷாரிக்.
"பிக் பாஸுக்குப் பிறகு ஹரிஷ் கல்யாணைப் பாருங்கள். இது எல்லோருக்கும் நடக்காது. என் விஷயத்தில், ஆம்! நான் ஒரு திரைப்படக் குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். என் பாதை அதனால் எளிதாக இருந்தது. ஆனால், நான் என்னை நிரூபிக்க வேண்டும். திரைத்துறையில் நமக்கு யாரைத் தெரியும் என்பது முக்கியமானது. எனவே நீங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருந்து, கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவராக இருந்தால் மட்டும் போதாது" என்று ஷாரிக் தெரிவித்தார்.