தமிழ் சினிமா

'நேர்கொண்ட பார்வை', 'டியர் காம்ரேட்' இயக்குநர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்: சின்மயி

செய்திப்பிரிவு

'நேர்கொண்ட பார்வை', 'டியர் காம்ரேட்', 'ப்ரோச்சேவாரெவருரா' போன்ற படங்களை எழுதும் கதாசிரியர்கள், இயக்கும் இயக்குநர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்று பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு வெளியான 'பிங்க்' என்கிற இந்தித் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' கடந்த வருடம் வெளியானது. அஜித் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம், பெண்களின் பாதுகாப்பு குறித்தும், சமூகமும், ஆண்களும் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்தும் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பையும் பெற்றது.

சில வருடங்களுக்கு முன் மீடூ இயக்கம் இந்தியாவில் ஆரம்பித்தபோது தமிழ்த் திரையுலகில் மீடூ குற்றச்சாட்டை முன்வைத்தவர் சின்மயி. இன்றுவரை அதுகுறித்துத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். மேலும் பல பெண்கள், தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து சின்மயி மூலமாகப் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அப்படியொரு பிரச்சினையையும், அதற்கான தீர்வையும் பேசியிருக்கும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தைப் பாராட்டி, சின்மயி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

"நான் ஒரு சராசரியான திரைப்பட ரசிகை. எனக்கு மகிழ்ச்சியான திரைப்படங்கள் பிடிக்கும். எனக்குக் கடினமான, சோகமான படங்களைப் பார்ப்பது மிகக் கடினம். 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தைப் பார்க்க பயந்து கொண்டிருந்தேன் ஏனென்றால் பார்க்கக் கடினமாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், ஒருவழியாக தைரியம் வந்து நேற்றிரவு படத்தைப் பார்த்தேன்.

ஒரு நல்ல செய்தி இவ்வளவு நுணுக்கத்துடன் சொல்லப்பட்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். படக்குழுவுக்கு எனது அன்பு. அஜித் போன்ற பெரிய நடிகர்கள் இப்படியான நுணுக்கமான, முற்போக்கான படங்களில் நடிப்பது மனநிறைவைத் தருகிறது. இந்தச் செய்தியை இன்னும் பெரிய அளவு கொண்டு போக அவர் உதவியாய் இருப்பார். பலரை யோசிக்க வைத்து, கேள்வி கேட்கவைத்து, புரிந்துகொள்ள உதவியிருப்பார் என நம்புகிறேன். இதன் ரீமேக்கில் பவன் கல்யாண் தெலுங்கில் நடிக்கிறார் என்பதிலும் மிக்க மகிழ்ச்சி.

'நேர்கொண்ட பார்வை', 'டியர் காம்ரேட்', 'ப்ரோச்சேவாரெவருரா' போன்ற படங்களை எழுதும் கதாசிரியர்கள், இயக்கும் இயக்குநர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். உங்களது புரிதலுக்கும், அணுகுமுறைக்கும் மிக்க நன்றி. அப்படியான சூழல்களில் நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை மாற்ற உங்களைப் போன்ற கூட்டாளிகள் இருப்பது உதவிகரமாய் இருக்கிறது".

இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT