சுசீந்திரன் இயக்கத்தில் நாயகனாக நடித்திருப்பது மட்டுமன்றி இசையமைப்பாளராகவும் ஜெய் அறிமுகமாகிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நாளை (நவம்பர் 14) தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் டீஸரை வெளியிடவுள்ளார்கள்.
இந்தப் படத்துக்கு முன்னதாக, 2 படங்களை இயக்கி முடித்துள்ளார் சுசீந்திரன். இரண்டிலுமே நாயகனாக ஜெய் நடித்துள்ளார். இதில் ஒரு படத்தில் ஜெய், பாரதிராஜா, திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனையடுத்து, முழுமையான ஆக்ஷன் படமொன்றிலும் ஜெய் நடித்துள்ளார்.
ஆக்ஷன் படத்தின் தலைப்பு நாளை (நவம்பர் 14) தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளது. இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் ஜெய்யுடன் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் ஜெய் அறிமுகமாகிறார். இதற்கான பணிகளைத் தற்போது கவனித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், எடிட்டராக காசி விஸ்வநாதன், கலை இயக்குநராக சேகர், நடன இயக்குநராக ஷோபி பால்ராஜ் ஆகியோர் இதில் பணிபுரிந்துள்ளனர்.