சந்தர்ப்பவாத கோரிக்கைகள் எங்களுக்கு அதிர்ச்சியைத் தருகின்றன என்று தயாரிப்பாளர்களின் முடிவுக்கு க்யூப் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (நவம்பர் 10) முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. வி.பி.எஃப் கட்டணம் தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் - க்யூப் நிறுவனம் ஆகியோருக்கு இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் புதிய படங்கள் எதுவுமே வெளியாகாது என்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்ட பல படங்களை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர்களின் முடிவுக்கு க்யூப் நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக க்யூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ஏற்கெனவே 2018-ல் இந்தப் பிரச்சினை வந்து, விபிஎஃப் கட்டணங்கள் 20 சதவீதம் குறைக்கப்பட்டபின் முடிவுக்கு வந்தது. இப்போதும் டிஜிட்டல் சேவை தருபவர்கள் விபிஎஃப் கட்டணங்களை வெகுவாகக் குறைத்துள்ளனர். ஆனால், சமரசம் ஏற்படவில்லை.
இப்போது கரோனா நெருக்கடியை மனதில் வைத்து முதலில் 50 சதவீதம் என்று குறைக்கப்பட்ட கட்டணம் தயாரிப்பாளர் சங்கத்தின் அழுத்தத்தால் 60 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால், இப்போது ஒட்டுமொத்தமாக அந்தக் கட்டணமே கூடாது என்கிறார்கள்.
திரையரங்குகளுடன் நீண்ட கால ஒப்பந்தம் போடப்பட்டு, பல நூறு கோடிகளை இந்த டிஜிட்டல் சேவையில் க்யூப் முதலீடு செய்துள்ளது. உலகில் செயல்பட்டு வரும் நான்கு டிசிஐ டிஜிட்டல் சினிமா சர்வர் உற்பத்தியாளர்களில் க்யூப் நிறுவனமும் ஒன்று. இது தேசத்துக்கும், மாநிலத்துக்கும் பெருமையான ஒரு விஷயம்.
தீபாவளிக்குப் புதிய திரைப்படங்கள் வெளியாகும் வழக்கம் தொடர வேண்டும் என்றுதான் மத்திய, மாநில அரசுகள் திரையரங்குகளைத் திறக்க ஆதரவு தெரிவித்துள்ளன. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு திரையரங்குகள் மற்றும் டிஜிட்டல் சேவை தருபவர்கள் மீது காட்டப்படும் நெறிமுறையற்ற செயல் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு இழைக்கும் அநியாயமும் ஆகும்.
படத்தை வெளியிடத் தயாராக இருந்த தயாரிப்பாளர்கள் சிலரும் அழுத்தம் கொடுக்கப்பட்டுப் புறக்கணிக்க வைக்கப்பட்டதாக நாங்கள் அறிகிறோம்.
துறையை, சினிமா ரசிகர்களை இது எவ்வளவு பெரிதாகப் பாதிக்கும் என்பதைப் பரிசீலிக்காமல், முன்னெப்போதும் இல்லாத இந்தக் கடின காலத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எவ்வளவு சலுகைகளைப் பெற முடியுமோ அவ்வளவு சலுகைகளைப் பெற தயாரிப்பாளர் சங்கம் முயன்று வருகிறது.
திரையரங்க அனுபவம் என்பதற்கு மாற்றே கிடையாது. ரசிகர்களின் திருப்திதான் எங்கள் லட்சியம். ஏற்கெனவே முடிந்த அளவு சமரசம் செய்துகொண்டோம். திரையரங்குகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் தராமல், தயாரிப்பாளர்கள் இதை ஏற்பதே முக்கியமாகும்.
திரைத்துறை பிழைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் சந்தர்ப்பவாத கோரிக்கைகள் எங்களுக்கு அதிர்ச்சியைத் தருகின்றன".
இவ்வாறு க்யூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.