'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. கரோனா அச்சுறுத்தலிலிருந்து படக்குழுவினரைப் பாதுகாக்க சித்த மருத்துவர் வீரபாபு பணிபுரிந்து வருகிறார்.
'ஈஸ்வரன்' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, இன்று (நவம்பர் 9) முதல் 'மாநாடு' படத்தின் பணிகளைத் தொடங்குகிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள். கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதால், அனைவருமே கரோனா பரிசோதனை செய்துகொண்டு கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், கரோனா அச்சுறுத்தல் இல்லாமல் படப்பிடிப்பு சுமுகமாக நடைபெற படக்குழுவினரின் பாதுகாப்பு நடவடிக்கையை சித்த மருத்துவர் வீரபாபுவிடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒப்படைத்துள்ளார். அவருடைய மேற்பார்வையிலேயே அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடைபெற்றது.
படக்குழுவினருக்கு தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் மூலிகைக் கசாயம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி படக்குழுவினருக்கு அவரது வழிகாட்டுதலின்படி ஆரோக்கியமான உணவு முறையும் பின்பற்றப்படுகிறது.
கரோனா தொற்றிலிருந்து படக்குழுவினரைப் பாதுகாக்க, படப்பிடிப்புத் தளத்திலேயே மருத்துவக் குழுவினர் கூடவே இருந்து, கவனித்துக் கொள்வது என்பது இதுதான் முதல் முறை. கரோனா தாக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, சித்த மருத்துவர் வீரபாபு இரவு பகல் பாராமல் தனது சிகிச்சை முறை மூலம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளைக் குணப்படுத்தி மக்களின் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'மாநாடு' படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரிச்சர்டு எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன், எடிட்டராக கே.எல்.ப்ரவீன், கலை இயக்குநராக உமேஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.