'செம்பருத்தி' சீரியலிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டது தொடர்பாக ஜனனி கண்ணீர் மல்க பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2017-ம் ஆண்டு தொடங்கி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'செம்பருத்தி'. இதில் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜனனி. இவர் சீரியல் தொடங்கியதிலிருந்தே நடித்து வருகிறார். அவரை சமீபமாக நீக்கியுள்ளனர்.
தனது யூ-டியூப் பக்கத்தில் தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு வருபவர் ஜனனி. அவ்வாறு வீடியோ ஒன்று ஷூட் செய்துக் கொண்டிருக்கும் போது, இதனை கூறியிருக்கிறார்கள். அப்படியே அழுது கொண்டே 'செம்பருத்தி' சீரியலிலிருந்து நீக்கப்பட்ட விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.
ஜனனி வெளியிட்டுள்ள வீடியோவில், 'செம்பருத்தி' சீரியலிலிருந்து நீக்கப்பட்டதாகப் பேசியிருக்கும் பகுதியில் அழுதிக் கொண்டே கூறியிருப்பதாவது:
"ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வீடியோ கட் ஆனது. அந்த தருணத்தில் தான் எனக்கொரு போன் வந்தது. இனிமேல் செம்பருத்தி சீரியலில் என்னை காண முடியாது. உடனடியாக இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இதற்கு அவர்களைக் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் சூழல் அப்படியாகிவிட்டது.
ஆனால், என் வாழ்க்கையில் தொலைக்காட்சியில் நடித்து வரும் 4 ஆண்டுகளில், 3 ஆண்டுகள் செம்பருத்தி சீரியலில் இருந்துள்ளேன். ஐஸ்வர்யாவாக நான் தயாரான நாட்கள் தான் அதிகம். அழக்கூடாது என நினைக்கிறேன். இனிமேல் ஐஸ்வர்யாவாக நான் இருக்க மாட்டேன். படப்பிடிப்பு தளத்திலிருந்த ஒவ்வொருவரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
என்னால் தேதிகள் கொடுக்க இயலவில்லை. மேலும், சில உள் பிரச்சினைகளும் போய் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் கிடையாது. இவ்வளவு நாளாக ஐஸ்வர்யாவுக்கு எவ்வளவு சப்போர்ட் கொடுத்தீர்களோ, அதே மாதிரி அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் கொடுங்கள். உங்கள் அனைவருடைய வரவேற்பினால் மட்டுமே 3 ஆண்டுகளை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.
செம்பருத்தி மாதிரியே இன்னொரு சீரியலில் உங்களைச் சந்திக்கிறேன். ஆனால், அப்படி கிடைக்குமா என்று தெரியவில்லை. நான் எவ்வளவோ சீரியல்களில் நடித்தாலும், செம்பருத்தி சீரியலை மறக்க முடியாது. ஏனென்றால் எனக்கு வாழ்க்கைக் கொடுத்த சீரியல் அது"
இவ்வாறு ஜனனி பேசியுள்ளார்.