'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்தபோது தான் ஆரம்பத்தில் வேலை செய்த நாட்கள் நினைவுக்கு வந்தன என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் விமான சேவை நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படம் இது. வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த பல ஊடகங்களுக்கு சூர்யா பேட்டியளித்து வருகிறார்.
திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன் சூர்யா ஜவுளித் துறையில் சில காலம் பணியாற்றினார். 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் ஒரு இளைஞன் உழைத்து முன்னேறும் காட்சிகளில் நடிக்கும்போது அந்த நாட்கள் ஞாபகம் வந்ததா என்ற கேள்விக்கு, "நமக்கு 18 வயது ஆனவுடன் நாம் எல்லாருமே அந்தக் கட்டத்தைத் தாண்டிவருவோம். எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம். நம்மை யார் ஏற்றுக் கொள்வார்கள், இந்த உலகில் நாம் எப்படிப் பிழைப்போம் என்பது போன்ற கேள்விகள் எழும். எனக்கும் எழுந்தன.
என் அப்பாவின் வழியில் நான் திரைத்துறையில் செல்ல விரும்பவில்லை. ஒரு ஜவுளித் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. எனது முதல் சம்பளம் ரூ.736. ஒவ்வொரு நாளும் 18 மணி நேர வேலை. இன்றும் அந்த வெள்ளை நிற சம்பளக் கவரின் எடை எனக்கு நினைவில் இருக்கிறது. 'சூரரைப் போற்று' படப்பிடிப்பின்போது அந்த நாட்களை எல்லாம் நினைத்துப் பார்த்தேன்.
மேலும் கடந்த சில வருடங்களில் நான் இருக்கும் நிலையிலேயே திருப்தி கண்டு என்னை இன்னும் உந்தித் தள்ளிக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன். இதுபோன்ற ஒரு படத்தின் மூலம் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்புக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்புத் தளத்தில் புத்துணர்வையும், புதுவகையான படமாக்கலையும் அனுபவித்தேன். அனைவருமே தங்களை அவ்வப்போது இப்படிப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஒரு சவால் வரும் போதுதான் அது நடக்கும். மகிழ்ச்சி என்பது புது சவால்களை எதிர்கொள்வதுதான்" என்று சூர்யா பதிலளித்துள்ளார்.
நவம்பர் 12 ஆம் தேதி 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.