தமிழ் சினிமா

அரசியல் கட்சி தொடங்குகிறாரா விஜய்?

செய்திப்பிரிவு

விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்ற செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், விஜய் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளுமே ஆயத்தமாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு கூட ரஜினியின் நிலைப்பாடு குறித்துப் பெரிதாக விவாதிக்கப்பட்டது. அவ்வப்போது விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டு வந்தன.

சமீபத்திய விஜய் படங்களில் இருக்கும் அரசியல் கருத்துகளும், அரசியல் வட்டாரத்தில் பெரிதும் சலசலப்பை உண்டாக்கி வருகின்றன. 'மாஸ்டர்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த விஷயத்துக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அந்தச் சமயத்திலேயே அரசியல் விமர்சகர்கள் பலரும் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற ரீதியில் கருத்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியானது. கட்சிப் பதிவு மனுவில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி வருகிறது. இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்தபோது, "இது முழுக்கவே தவறான செய்தி. எங்களுக்கே இது புதிதாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை நாங்களே விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் எங்கள் தரப்பிலிருந்து விரிவான விளக்கம் வெளியாகும்" என்று தெரிவித்தார்கள்.

விஜய்யின் மேலாளர், பி.ஆர்.ஓ இருவருமே தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT