தன்னிடம் ஆரவ் பற்றியும் அவரைக் காதலித்தது பற்றியும் கேட்க வேண்டாம் என நடிகை ஓவியா கூறியுள்ளார்.
தமிழில் 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கமல் தொகுத்து வழங்கினார். 'பிக் பாஸ்' சீசன்-1 நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஓவியா.
சமூக வலைதளங்களில் 'ஓவியா ஆர்மி' என்ற பெயரில் நிறையப் பக்கங்கள் தொடங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே வந்தவுடன், அவர் எங்கு சென்றாலும் பெருங்கூட்டம் கூடியது. ஆனால், அவரோ அந்தப் பிரபலத்தைத் திரையுலகில் பயன்படுத்தவில்லை.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென நேரலையில் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் ஆரவ் பற்றிக் கேட்டபோது, "ஆரவ்வுக்குத் திருமணம் நடந்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர்களின் அற்புதமான வாழ்க்கைக்கு நான் சந்தோஷப்படுகிறேன். நான் அப்போது சென்னையில் இல்லை என்பதால் திருமணத்துக்குச் செல்ல முடியவில்லை.
ஆரவ்வுக்கும் எனக்கும் இருந்த காதல் எல்லாம் முடிந்துவிட்டது. நாங்கள் இருவரும் அதைக் கடந்து வந்துவிட்டோம். எனவே அவரைப் பற்றி இப்படியெல்லாம் இனி கேட்காதீர்கள். அவர் வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் அவரை அதிகம் மதிக்கிறேன்" என்று ஓவியா பதிலளித்துள்ளார்.
மேலும், 'பிக்பாஸ் 4' பார்க்கிறீர்களா என்று கேட்டதற்கு, தான் சில மாதங்களாக தொலைக்காட்சி, மொபைல் பக்கமே போகவில்லை என்று ஓவியா கூறியுள்ளார்.