தமிழ் சினிமா

பெண்களிடமிருந்து கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளோம்: சூர்யா

செய்திப்பிரிவு

பெண்களிடமிருந்து கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளோம் என்று சூர்யா தான் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தீபாவளி வெளியீடாக நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'சூரரைப் போற்று' படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களை ஜூம் செயலி வழியாகச் சந்தித்துப் பேசினார் சூர்யா.

அச்சந்திப்பில் "முன்னணி நடிகராக ஒரு பெண் இயக்குநருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது” என்ற கேள்விக்கு சூர்யா கூறியதாவது:

"பள்ளி, கல்லூரியில் பெண்கள் ஆசிரியர்களாக வரும் போது கற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருப்போமா?. முன்பு திரைத்துறையில் பெண் இயக்குநர் என்ற பார்வை இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அனைத்துமே மாறிவிட்டது. விளையாட்டு தொடங்கி அனைத்து விஷயங்களிலுமே பெண்களிலிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளோம்.

பெண் இயக்குநராக இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. 'சூரரைப் போற்று' படப்பிடிப்பு தளத்தில் சுமார் 200 பேரை அவருடைய கட்டுக்குள் வைத்திருந்தார். அனைவருமே அவருடைய கனவு நனவாக உழைத்திருக்கிறோம். சுதாவிடம் அடுத்தக் கதை எழுதும் போதும் என்னை நினைத்தே எழுது எனக் கேட்டிருக்கிறேன்.

நான், மாதவன், சுதா மூவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். மாதவனுக்கு நான் நன்றி சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் 'இறுதிச்சுற்று' ஏற்படுத்திய தாக்கத்தால் தான், இந்த மாதிரியான படங்கள் பண்ண வேண்டும் எனத் தோன்றியது"

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT