தமிழ் சினிமா

'தலைவி' படத்துக்காக 20 கிலோ கூடுதல் எடை, முதுகு பாதிப்பு: கங்கணா ரணாவத் பகிர்வு

செய்திப்பிரிவு

'தலைவி' படத்துக்காகத் தான் 20 கிலோ உடல் எடையை அதிகரித்ததாகவும், இதனால் தனது முதுகு கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தலைவி'. இந்தப் படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காகத் தான் எடை கூட்டியதாகவும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப கடுமையாகப் பயிற்சி செய்து வருவதாகவும் ஏற்கெனவே கங்கணா ரணாவத் பதிவிட்டிருந்தார்.

புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பழைய புகைப்படங்களையும், 'தலைவி' படத்தின் தோற்றத்தையும் பகிர்ந்துள்ள கங்கணா, "இந்தியத் திரையில் முதல் பெண் சூப்பர் ஹீரோவாக நான் நடித்தேன். சிறியதாகவும் அதே சமயம் வலிமையுடனும் இருக்கும் என் அரிய உடலமைப்புக்கு நன்றி. 30 வயதுக்குப் பிறகு 'தலைவி' படத்துக்காக நான் 20 கிலோ உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்தது, பரதநாட்டியம் ஆட வேண்டியிருந்தது. இதனால் எனது முதுகில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தைக் கச்சிதமாக நடிப்பதை விட வேறெதுவும் பெரிதாகத் திருப்தியளிக்காது.

மீண்டும் பழைய நிலைக்கு என் உடலைக் கொண்டு வரும் பயணம் எளிமையாக இல்லை. நான் நன்றாக உணர்கிறேன். ஆனால், ஏழு மாதப் பயிற்சிக்குப் பிறகும் என்னால் பழைய திடத்துக்கு, வேகத்துக்குத் திரும்ப முடியவில்லை. இன்னும் 5 கிலோ இறங்க மாட்டேன் என்கிறது. சில நேரங்களில் விரக்தியாக இருக்கும். ஆனால் என் இயக்குநர் விஜய், ‘தலைவி’ காட்சிகளைக் காட்டும்போது எல்லாம் சரியாகிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT